சென்னை: ஈஸ்டர் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் உறவினர், நண்பர்களுக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
பாவிகளுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவர் 40 நாட்கள் வனாந்திரத்தில் நோன்பு இருந்தார். இதை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாளிலிருந்து 40 நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள். இதன் அடுத்த நிகழ்வாக ஈஸ்டர் திருநாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். துக்கதினமான இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் முழு நோன்பு கடைபிடிப்பார்கள்.
அதன் பிறகு 3ம் நாள் இயேசு உயிர்த்தெழும் நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுவர். அதன்படி ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சென்னை கதீட்ரல் தேவாலயம், லஸ் தேவாலயம், வெஸ்லி தேவாலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், செயின்ட் சார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயம், ஜார்ஜ் டவுன் ஆர்மேனியன் தெருவில் உள்ள ஆர்மேனிய தேவாலயம், சைதாப்பேட்டை லிட்டில் மவுண்டில் உள்ள புனித தாமஸ் ஆலயம், பெரம்பூர் லூர்து மாதா ஆலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு திருப்பலிகளும் ஆராதனைகளும் நடந்தது.
அப்போது ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் இறைமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள். சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகை ஒரு ஈகை திருநாளாகும். மற்றவர்களுக்கு உதவும் நாளாகும். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு முதல் ஆலயங்களில் ஆடம்பர திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கேக், பிரியாணி உள்ளிட்ட விருந்து அளித்து மகிழ்ந்தனர்.
The post ஈஸ்டர் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை: உறவினர், நண்பர்களுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.