×

ரூ.480கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள உக்கடம் மேம்பாலத்தில் விரைவில் சோதனை ஓட்டம்

கோவை: கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், வாளையாறு, பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் – ஆத்துப்பாலம் சாலை முக்கியமானதாகும். இச்சாலை வழியாக தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இச்சாலையில், உக்கடம் – ஆத்துப்பாலத்தை மக்கள் எளிதில் கடக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்படும் என கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வரை 4 வழித்தட மேம்பாலம் அமைக்கும் வகையில், கடந்த 02.04.2018 அன்று ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், திட்ட வடிவத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ரூ.127.50 கோடி மதிப்பில் திட்டப்பணி தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர், மக்களின் கோரிக்கையை ஏற்று, கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தை கடந்து, பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் திரும்பும் வகையில் இப்பாலம் நீட்டிக்கப்பட்டது.

இப்பாலம் கட்டுமான பணியில் சில காலம் தொய்வு ஏற்பட்டாலும், தற்போது கட்டுமான பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆத்துப்பாலம் – உக்கடம் வரை முதல் பிரிவாகவும், ஆத்துப்பாலம் – பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சுங்கம் சாலை ஆகியவை நீட்டிக்கப்பட்ட பிரிவாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆத்துப்பாலம் – உக்கடம் முதல்கட்டப் பிரிவில் அனைத்து பணிகளும் கடந்த மே மாதம் முடிக்கப்பட்டு விட்டன.ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செல்வபுரம் பைபாஸ் சாலையை ஒட்டிய இடத்தில் இறங்கி, ஒப்பணக்கார வீதியை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதில், கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரை 4 வழித்தட மேம்பாலமாகவும், ஒப்பணக்கார வீதியை அடையும் இறங்கு தளம் 2 வழித்தடமாகவும் கட்டப்பட்டுள்ளது. முதல்கட்டப் பிரிவில், மேம்பாலத்தின் மொத்த தூரம் 1,454.80 மீட்டராகும்.

அதேபோல், 2-ம் கட்ட நீட்டிக்கப்பட்ட பிரிவில், ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலையை மையப்படுத்தி அமைக்கப்படுகிறது. 2-ம் கட்ட நீட்டிப்பு திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி இருந்த இடத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தாங்குதூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் மார்க்கத்தில் சென்று சுங்கம்-வாலாங்குளம் பைபாஸ் சாலையில் இறங்கும் வகையில் ஒரு தடமும், இதற்கு அருகே ஆத்துப்பாலம் நோக்கி செல்பவர்கள் ஏறுவதற்கான தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பாலப்பணிகள் ரூ.170.61 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளுக்காக மொத்தம் 7,210 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பாலத்துக்காக மொத்தம், 125 தூண்கள் (பில்லர்) அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் ரூ.360 கோடியில் கட்டப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய வகையில், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.120 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் சேர்த்தால், இப்பாலம் கட்டுமான பணி முடிக்க ரூ.480 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்பாலத்தின் நீளம் 3.8 கி.மீ ஆகும். நான்கு வழிச்சாலையாக 17.2 மீட்டர் அகலத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தில் மொத்தம் 8 இடத்தில் ஏற்ற, இறக்க தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. மிக விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதுபற்றி நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘‘முதல்கட்ட திட்டத்தில் 100 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. இரண்டாவது கட்ட நீட்டிப்பு பிரிவு திட்டத்தில் 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இன்னும் சில தினங்களில் சோதனை ஓட்டம் துவங்கும்’’ என்றனர்.

The post ரூ.480கோடியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள உக்கடம் மேம்பாலத்தில் விரைவில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Ukadam ,Kowai ,Ukkadam- ,Athupalam ,Kowai Managar ,Pollachi ,Udumala ,Palani ,Dindigul ,Valaiyaru ,Palakkad ,Dinakaran ,
× RELATED கோவை காரமடை அருகே தறிகெட்டு ஓடிய...