சமயபுரம், மார்ச் 30: 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு வாக்குறுதி அளித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேரு நேற்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் முன்னிலையில் மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பூனாம்பாளையம், ராசாம்பாளையம், அழகியமணவாளம், கோபுரபட்டி, நொச்சியம், கிளியநல்லூர், திருவாசி, நெ. 1 டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் அருண்நேரு பேசும்போது, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இந்த நாடாளுமன்ற தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தல்.
ஜனநாயகம் வெல்லும் என்கிற எண்ணமே தான் தமிழக மக்களிடம் இருக்கிறது. நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் முதலில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து, அனைத்து ஏரி, குளங்களை சீரமைக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். பின்னர் பூனாம்பாளையம், ராசாம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் கிராமப்புற ஏழை எளிய பெண்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தார்.
இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கும், மேலும் வரும் காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக கொண்டு வருவதற்கும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழக முதல்வருக்கு அளிக்கும் வாக்கு ஆகும். நான் அரசியல் பணிகளை அவர் அருகில் நின்று பார்த்துள்ளேன். மேலும் தற்போது அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்கள் பணியாற்ற உள்ளேன். இத்தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும் என்று பேசினார். வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சி, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, சிபிஎம் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post ஆபத்தான பயணம் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்த நடவடிக்கை பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு வாக்குறுதி appeared first on Dinakaran.