×

ஆவடி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு, பேரணி

ஆவடி, மார்ச் 31: ஆவடி பருத்திப்பட்டு பூங்கா மற்றும் பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி தேர்தல் உறுதிமொழி ஏற்கப்பட்டு பின்னர் பேரணி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பூங்காவில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று ஆவடி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆவடி மாநகராட்சி துணை ஆணையர்கள் சங்கர், மாரிசெல்வி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், மாநகராட்சி ஊழியர்கள், சுயஉதவிக் குழுக்கள் கலந்துகொண்டு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்திய குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், சாதி, வகுப்பு, மொழி ஆகிய தாக்கங்களுக்கு ஆள்படாமலும், எவ்வித தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் எனக்கூறி, 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி, தேர்தல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், தேர்தல் விழிப்புணர்வு பதாகைகைளை ஏந்தியவாறு, பருத்திப்பட்டு ஏரியை படகுகள் மூலம் சுற்றிவந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்வின்போது, மாநகர அலுவலர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் மொய்தின், ஜனார்த்தனன், குமார், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர் பிரபாகரன், சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராமதாஸ், வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் ஏராளமான மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்துகொண்டு, `வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்’, `இந்திய ஜனநாயகத்தில் பங்கு கொள்வோம்’, `வாக்களிப்பது எனது எதிர்காலம்’, `தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை’, `பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம்’, `தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா’, `ஓட்டுக்கு வாங்கமாட்டோம் நோட்டு’, `நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், பெரியபாளையம் பகுதியின் உள்ள முக்கிய விதிகளின் வழியாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்வின்போது ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, வனிதா, உமாவதி, சுய உதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆவடி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு, பேரணி appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Uthukottai ,Avadi ,Avadi Cotton Park ,Periyapalayam PTO ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை...