×

பாஜ வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்: அதிமுகவினர் புகார்

சென்னை: பாஜ வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: கோவை நாடாளுமன்ற பாஜ வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்புமனுவை நீதித்துறை அல்லாத முத்திரை தாளில் தாக்கல் செய்வதற்கு பதிலாக நீதிமன்ற கட்டணம் செலுத்துவதற்கான முத்திரை தாளில் தாக்கல் செய்துள்ளார். இது இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது. இதன்மூலம் தற்போது அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு செல்லாததாகி விடுகிறது.

இதுகுறித்து அதிமுக மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் சுட்டிக்காட்டியும் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டு அண்ணாமலை வேட்புமனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அண்ணாமலை இரு வேட்புமனுக்களை தாக்கல் செய்ததாகவும், 2வது வேட்புமனு நீதித்துறை அல்லாத முத்திரைத்தாளில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் முறைப்படி தாக்கல் செய்யப்பட்ட அந்த வேட்புமனு அன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதே சட்டம். அவ்வாறு செய்யாமல் எதிர்க்கட்சியினரால் ஆட்சேபனை எழுப்பப்பட்ட பின்னரே சட்ட விரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி இந்த விஷயத்தில் இயந்திர கதியில் செயல்பட்டுள்ளதும், பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதும் தெரிய வருகிறது.

எனவே கோவை தேர்தல் அதிகாரியாக இவர் தொடரும் பட்சத்தில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் அங்கு நடைபெறாது என்பதால் வேறு ஒரு அதிகாரியை கோவை நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். நீலகிரி தொகுதியில் பாஜ வேட்பாளர் மனு தாக்கல் முன்கூட்டியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தும் தொடர்ந்து காலம் தாழ்த்தினர். அப்போது ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனு தாக்கல் செய்ய வந்த அதிமுகவினரை போலீசார் உள்நோக்கத்தோடு தடுத்ததுடன், தடியடி நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. ஒருதலைபட்சமாக செயல்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பாஜ வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்படும் கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்: அதிமுகவினர் புகார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Parliamentary ,BJP ,Annamalai ,AIADMK ,CHENNAI ,Advocate Unit Secretary ,Inpadurai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Central ,Secretariat ,Dinakaran ,
× RELATED ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை