×

திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தியாசமாகச்சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே! தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திரு மங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.
“கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே’’

ஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை. முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார். “நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை! நெஞ்சார நினைத்தால்தான் போகலாம். உன் ஒத்துழைப்பு இன்றிப் போக முடியாது.” பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்துவிட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.

ஏழு மலை ஏன் சுமக்கிறது?

நம்மாழ்வார்
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே”
– என்று பாசுரம் பாடி இருக்கிறார்.
இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார். அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்து கொண்டு இருந்தான். அந்த மலைதான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றிக் கடனாகச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள்.

இன்னொரு கோணமும் இருக்கிறது. பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். ராமாவதாரத்தில் தம்பியாகப்பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியாகம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்க வைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான்.

அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர் செயல்”(Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். காரணம் கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதாரகாலத்திலிருந்தே, திருமலை எம்பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது. “தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

The post திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Thirumangaiyazhwar ,Thiruvenkatam ,Mangaiyazhwar ,
× RELATED மனைவியை கொன்று கணவர் தற்கொலை