நன்றி குங்குமம் டாக்டர்
2011 -இல் பாலா இயக்கத்தில் வெளியான `அவன் இவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜனனி ஐயர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், அதைத்தொடர்ந்து `தெகிடி’, `அதே கண்கள்’, `பலூன்’ போன்ற படங்களில் நடித்தார். தனது இயல்பான, யதார்த்தமான கதாபாத்திரங்களின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஜனனி, கடந்த மாதம் நடிகர் பரத்துடன் இணைந்து நடித்த “இப்படிக்கு காதல்” ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்துள்ளது.
அதைத்தொடர்ந்து இந்த மாதம் இவர் நடித்த “ஹாட்ஸ்பாட்” திரைப்படம் வெளியாகிறது. இது தவிர, தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் “ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்”, விஜய் ராஜ் இயக்கத்தில் “முன்னறிவான்” என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துவரும் ஜனனி தனது ஃபிட்னெஸ் சீக்ரெட் குறித்து இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
ஒர்க்கவுட்ஸ்: நான் ஒர்க்அவுட், எக்சர்சைஸ் விஷயங்களில் பெருசா கவனம் செலுத்துகிற ஆளில்லை. உடற்பயிற்சிகளில், எனக்கு யோகாதான் ஓரளவுக்குச் செய்யத் தெரியும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில், காலை நேரத்தில் வீட்டிலேயே யோகா செய்வேன். இதுதவிர, நான் தினமும் செய்கிற முக்கியமான பயிற்சிகள் இரண்டுதான். ஒன்று நடனப்பயிற்சி மற்றொன்று நீச்சல். தினமும் காலையில் ஒருமணிநேரம் டான்ஸ் பயிற்சி செய்வேன். நேரம் கிடைக்கும்போது நீச்சல்குளத்துக்குப் போவேன்.
இந்த இரண்டும், உடலின் அனைத்துத் தசைகளுக்கும் வேலை கொடுக்கும் பயிற்சிங்கிறதால, தனியாக உடற்பயிற்சி செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தினசரி காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வாய்ப்பில்லாதவங்க, இந்த ரெண்டையும் குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாக ஃபாலோ பண்ணினாலே போதும். உடலுக்குப் புதுத்தெம்பு கிடைக்கும். அதுபோன்று, சில நேரங்களில் கார்போஹைட்ரேட்ஸ், கலோரி, கொழுப்புச்சத்து அதிகமிருக்கும் உணவுகளைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்படும். அப்படி சாப்பிடும்போது, அதை ஈடுகட்ட நீச்சலும் நடனமும் ரொம்ப உதவியா இருக்கிறது.
டயட்: என்னுடைய டயட் ஷெட்யூலைப் பொறுத்தவரை, உணவு விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பேன். என்னோட ஃபுட் மெனுவிலிருக்கும் உணவுகள் ஊட்டச்சத்து அதிகமுள்ளதாகவும் அதேசமயம் எனக்குப் பிடிச்சதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுபோன்று, எவ்வளவு சாப்பிடுகிறேன் என்பதிலும் கவனமாக இருப்பேன். அரிசி சாதம் என்னோட ஃபேவரைட். அதைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுவேன். அதுபோன்று பாதாம் சேர்த்த உணவுகள், ஸ்நாக்ஸ் என பாதாமை அதிகம் சேர்த்துக்கொள்வேன்.
பொதுவாக எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும், சாதாரணத் தண்ணீர் இல்லைன்னா குளிர்ந்த நீரைத்தான் குடிப்பார்கள். ஆனால், நான் கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிட்டு முடிச்சதும், ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பேன். இந்தப் பழக்கத்தை, எங்க அம்மாதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. வீடு, ஹோட்டல், ஷூட்டிங் ஸ்பாட்னு எந்த இடத்துல சாப்பிட்டாலும், கண்டிப்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சுடுவேன். இதனால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட்டாலும் செரிமானச் சிக்கல் ஏற்படுவதில்லை. “வெந்நீரைக் குடிக்கும்போது, செரிமானம் வேகமாகவும் சீராகவும் நடக்கும். சருமம் பொலிவுறும்” என்று எங்க அம்மா சொல்வாங்க. நானும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கேன். என்னோட நிறைய நண்பர்களுக்கு இதைப் பரிந்துரையும் செய்திருக்கிறேன்.
பியூட்டி: ஒரு நடிகையாக இருப்பதால், என்னோட அழகுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டியிருக்கிறது. அந்தவகையில், அழகை மெயின்டன் செய்ய நான செய்கிற விஷயங்கள் என்றால், தினமும் காலையில் வெறும் வயிற்றில், பீட்ரூட் அல்லது கேரட் அல்லது தக்காளி ஜூஸ் குடிப்பேன். காரணம், அது சருமப் பொலிவை அதிகரிக்க உதவும். ஸ்கின்கேரை பொறுத்தவரை சோப், ஃபேஸ்வாஷ், க்ளென்ஸர் (cleanser) போன்றவற்றை பயன்படுத்துகிறேன்.
அதேசமயம், கெமிக்கல், செயற்கைப்பொருட்களை நான் பயன்படுத்த மாட்டேன். குளிர்ந்த நீரில்தான் முகம் கழுவுவேன். என் சருமத்துக்கு எந்தச் சூழலிலும் தடிமனான, கடினமான, செயற்கையான பொருட்களைப் பயன்படுத்துறதே இல்லை. இதுதான் என்னோட ஸ்கின் சீக்ரெட். இது தவிர, நான் எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கறதுக்கு முக்கியக் காரணம், உடம்புக்கு நான் கொடுக்குற ரெஸ்ட்தான். தேவையான அளவுக்கு உடலுக்கு ஓய்வு கொடுக்கலைன்னா, கண்ணு காட்டிக்கொடுத்து விடும்.
ஷூட்டிங்ல சோர்ந்து போன கண்களோட கேமராவுக்கு முன்னாடி போய் நின்னா, மானிட்டர்ல தெரிஞ்சுடும். பிஸியான நேரத்துல தூங்கவும் முடியாது. ஆக, என்ன ஆனாலும் சரி, தினமும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரைக்கும் தூங்கிடுவேன். எவ்வளவு பிஸி ஷெட்யூலா இருந்தாலும் சரி அதுக்கேற்ற மாதிரி என்னோட மத்த வேலைகளை மாற்றிக் கொள்வேன். அதில் எந்த காம்ப்ரமைஸும் கிடையாது. சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே உடல் பிரெஷ்ஷாக இருக்கும்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
The post ஜனனி ஐயர் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.