×

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

புதுடெல்லி: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆகிய ஐவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் :இந்தியாவில் பசுமைப் புரட்சி எனப்படும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முன்னோடியாகச் செயல்பட்டவர் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி : 96 வயதாகும் எல்.கே.அத்வானி, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்.ஸில் தீவிரமாக பணியாற்றிய எல்.கே.அத்வானி, பாஜகவை நிறுவிய தலைவர்களுள் ஒருவர். 1990-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார்.

பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் : பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் ஓபிசி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக, இறந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்றளவும் அறியப்படுகிற தலைவர் கர்பூரி தாக்கூர்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் : தென் மாநிலங்களில் இருந்து பிரதமரான முதல் தலைவர் நரசிம்மராவ் ஆவார். ஆந்திராவின் முதல்வராகவும் பின்னர் பல ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த பி.வி.நரசிம்மராவ், தனது 70-வது வயதில் இந்திய பிரதமராகப் பதவி ஏற்றார். இவரது காலத்தில் தான் பல புதிய பொருளாதார கொள்கைகள் வடிவமைக்கப்பட்டன. அநேகமாக எல்லாத் துறைகளிலும் இந்தியா அபார வளர்ச்சி கண்டது. இந்தியாவின் முகம் நவீனத்துக்கு மாறியது; இந்தியர்களின் வாழ்க்கை முறை அடியோடு மாற்றம் கண்டது.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் :விவசாயிகளின் சாம்பியனாக பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட சரண் சிங், வட இந்தியாவில் விவசாய சமூகங்களை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் வகுப்பை உருவாக்கிய பெருமைக்குரியவர், இன்றும் அவரது செல்வாக்கு உணரப்படுகிறது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எல்.கே. அத்வானி தவிர 4 பேருக்கு பாரத் ரத்னா விருதுகளை வழங்கினார். வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கான பாரத ரத்னா விருது வீடு தேடி வழங்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், மறைவுக்குப் பிந்தைய விருதாளர்களான பி.வி. நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், எம்.எஸ். சுவாமிநாதன், கர்ப்பூரி தாக்கூர் ஆகியோரின் வாரிசுகளிடம் பாரத் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.பி.வி. நரசிம்ம ராவுக்கான பாரத் ரத்னா விருதை அவரது மகன் பி.வி. பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்டார். சவுத்ரி சரண் சிங்குக்கான பாரத ரத்னா விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார். எம்.எஸ். ஸ்வாமிநாதனுக்கான விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். கர்ப்பூரி தாக்கூருக்கான விருதை அவரது மகன் ராம் நாத் தாக்கூர் பெற்றுக்கொண்டார்.

இந்த விருது வழங்கும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்ளிட்ட நால்வருக்கு பாரத் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : M. S. Four ,Swaminathan ,President of the Republic ,Drawupati Murmu ,New Delhi ,Agronomist ,B. V. Narasimma Rao ,Chaudhry Charan Singh ,M. S. Swaminathan ,Bihar Karpuri Thakur ,President ,
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...