×

நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்களை குழப்பும் மாறுபட்ட அளவீடுகள்

*பெயர் பலகை மாற்ற மக்கள் வலியுறுத்தல்

கீழ்வேளூர் : நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்களை குழப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட அளவீடுகளை கொண்ட பெயர் பலகையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.நாகை–தஞ்சை தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்க நான்கு வழி சாலைக்கு கடந்த தி.மு.க. ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தப்பட்டு ஆட்சி மாற்றத்தின் காரணமாக இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டது. நாகை முதல் தஞ்சை வரையிலான சாலையில் பழைய சாலையிலும், புதிதாக கையகப்படுத்தப்பட்ட வயல்களில் புறவழிச்சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நாகை புத்தூர் ஈ.சி.ஆர். சாலை முதல் கீழ்வேளூரை அடுத்த காணூர் வரை கையகப்படுத்தப்படட நிலத்தில் மண் நிரப்பி புதிய சாலையாக புறவழிசாலையாக அமைக்கப்பட்டுள்ளது.

சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் தேமங்கலம் ஊராட்சி மூன்றாம் வாய்க்கால் என்ற இடத்திலும் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூர்என்ற நாகை-தஞ்சை புதிய மற்றும் பழைய சாலை சந்திப்பில் தாழ்வாக ஒரு பெயர் பலகையும், உயராமக ஒரு பெயர் பலகையும் அருகருகே வைக்கப்பட்டுள்ளது. தேமங்கலம் மூன்றாம் வாய்க்காலில் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள தாழ்வான பெயர் பலகையில் நாகப்பட்டினம் 9 கி.மீ. என்றும் அதே இடத்தில் உயரமாக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் நாகப்பட்டினம் 5 கி.மீ. எழுதப்பட்டுள்ளது.

அதேப்போல் நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வைக்கப்பட்டுள்ள தாழ்வான பெயர் பலகையில் திருவாரூர் 18 கி.மீ. என்றும் உயரமான வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் திருவாரூர் 24 கி.மீ. என்றும். எழுதப்பட்டள்ளது. மேலும் அத்திப்பூயூரில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளிலும் இது போன்று உயரமான மற்றும் தாழ்வான பெயர் பலகைகயில் மாறுபட்ட வகையில் கி.மீ. தொலைவை குறிக்கப்பட்டுள்ளது.

அத்திப்புலியூர் அருகே ஆத்தூர் செல்லும் சாலையை ஆத்தூர் என்று எழுதாமல் ஆமூர் என்று எழுதப்பட்டுள்ளது. அடுத்து கூத்தூரில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் அரை கிலோ மீட்டர் உள்ள கூத்தூருக்கு கூத்தூர் 3 கிலோ மீட்டர் என்று எழுதப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் வைக்கப்பட்ட இரண்டு பெயர் பலகையில் மாறுபட்ட அளவில் கி.மீ. எழுதப்பட்டுள்ளதும், ஊர் பெயரை மாற்றியும் நாகை முதல் காணு£ர் வரையில் உள்ள சாலையில் பெயர் பலகையில் ஊர்களின் தொலைவுகளை மாறுபட்டு எழுதப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். உடன் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பெயர் பலகைகளில் மாறுப்பட்ட நிலையில் எழுதப்பட்டுள்ளதை சரி செய்திட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்களை குழப்பும் மாறுபட்ட அளவீடுகள் appeared first on Dinakaran.

Tags : Nagai-Tanjoi National Highway ,Kilvellur ,DMK ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் அருகே மேலஇலுப்பூர் பிடாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்