×

ஈத்தாமொழி அருகே கோயில் திருவிழாவுக்கு கட்டி இருந்த ஸ்பீக்கர், மின் ஒயர் சேதம்

*முன்னாள் ராணுவ வீரர் கைது

ஈத்தாமொழி : ஈத்தாமொழி அருகே கோயில் விழாவுக்காக வைத்திருந்த ஸ்பீக்கரை தள்ளி விட்டு விட்டு, ஒயர்களை சேதப்படுத்திய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள வடக்கு சூரங்குடி பிச்சைக்கால சுவாமி கோவிலில் திருவிழா நடைபெறுவதையொட்டி நேற்று முன் தினம் மாலை சுமார் 5 மணியளவில் கோவிலில் இருந்து ரோடு வரை தோரணங்கள் மற்றும் மின் விளக்குகள், ஸ்பீக்கர் செட் அமைக்கும் பணியை கோவில் நிர்வாகத்தினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஸ்பீக்கரை கீழே தள்ளிவிட்டு ஒயர்களை அறுத்து எறிந்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். சுமார் 2 மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் திரண்டதை தொடர்ந்து அந்த நபர், அருகில் இருந்த சர்ச் காம்பவுண்டு ஏறி குதித்து உள்ளே சென்று விட்டார். அப்போது பொதுமக்கள் சர்ச்சுக்குள் பதுங்கிய அந்த நபரை பிடிக்க உள்ளே சென்றபோது சர்ச்சில் ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. உள்ளே சென்ற நபரும் ஆராதனையில் இருந்த மக்களோடு மக்களாக கலந்து உட்கார்ந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சில் ஆராதனை முடியும் வரைக்கும் அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் சர்ச்சுக்குள் சென்று அந்த நபரை அடையாளம் காட்டவே போலீசார் அந்த நபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரித்த போது அவர், ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்த இன்பன்ட் ஜெகதீசன் (38) என்பது தெரிய வந்தது. இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி விட்டோடி ( எந்த தகவலும் தெரிவிக்காமல் ஓடி வருதல்) முறையில் அங்கிருந்து வந்தவர் ஆவார்.

இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது டாக்டரிடம் தனக்கு உடல் வலிக்கிறது. நெஞ்சு வலிக்கிறது என கூற, டாக்டரும் அட்மிட் என எழுதினார். இதையடுத்து இன்பன்ட் ஜெகதீசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சை பெறும் வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ஈத்தாமொழி அருகே கோயில் திருவிழாவுக்கு கட்டி இருந்த ஸ்பீக்கர், மின் ஒயர் சேதம் appeared first on Dinakaran.

Tags : festival ,Ethamozhi ,Dinakaran ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு