×

பிரிந்து சென்ற கணவன் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா

*பொன்னை போலீசார் சமரசம்

பொன்னை : பிரிந்து சென்ற கணவன் மீது நடவடிக்கை கோரி பொன்னை காவல் நிலையத்தில் நேற்று இளம்பெண் தனது குழந்தையுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவுக்குட்பட்ட பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா(22). இவரது கணவன் சீமோன். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சீமோனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனைவி தீபிகா மற்றும் குழந்தையை பிரிந்து அந்த பெண்ணுடன் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து தீபிகா கடந்த டிசம்பர் மாதம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், சீமோனை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீமோன் மீண்டும் மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து அந்த பெண்ணுடன் சென்றுவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த தீபிகா தனது குழந்தையுடன் நேற்று பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

ஆனால், போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறினார்களாம். தொடர்ந்து, தீபிகா காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறினார்களாம். போலீசார் மாறி மாறி அலைக்கழித்ததால் வேதனை அடைந்த தீபிகா தனது குழந்தையுடன் பொன்னை காவல் நிலையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார், இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மீண்டும் அறிவுறுத்தியதன்பேரில் தீபிகா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post பிரிந்து சென்ற கணவன் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் குழந்தையுடன் இளம்பெண் திடீர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tarna ,Ponnai Police Conciliation ,Ponnai ,Ponnai police station ,Vellore district ,Kiraisatu ,Kadpadi Taluka ,Sudhir Tarna ,
× RELATED சாமியாரை அடித்துக்கொன்று சடலம்...