×

மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

பவானி: மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கு திமுகவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையின் பாசன வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 46 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த வருடம் போதிய பருவமழை பெய்யாத காரணத்தினால் மேட்டூர் அணையிலிருந்து வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால், பாசனப் பகுதிகளில் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீரின் அளவு குறைந்தது. ஏரிகள், குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்ததால் மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருந்த போதிலும், தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் குடிநீர் தேவைக்காக 15 நாட்களுக்கு வினாடிக்கு தலா 200 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து,மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அம்மாபேட்டையை வந்தடைந்தது.  இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்த முன்னாள் எம்எல்ஏ மாதையன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அறிவானந்தம்,

அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவர் பாரதி (எ)வெங்கடாசலம், பூனாச்சி ஊராட்சித் தலைவர் சின்ராசு, திமுக நிர்வாகி நாகராஜ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். இதேபோன்று, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் மற்றும் அமைச்சர் சு.முத்துசாமியைச் சந்தித்து திமுக ஒன்றியச் செயலாளர்கள் சரவணன்,மணி (எ) ஈஸ்வரன், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர் விஜயானந்த், மாவட்டப் பிரதிநிதி சண்முகசுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் பங்க் சுரேஷ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

The post மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன வாய்க்காலில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Bhavani ,Tamil Nadu government ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...