×
Saravana Stores

நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து கூடுதல் டிஜிபிக்கள் மகேஷ்குமார் அகர்வால், ஜெயராமன் ஆகியோர் மாவட்ட வாரியாக எஸ்பிக்களுடன் பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள் மற்றும் சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் 5 குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்திய வழக்கில் தொடர்புடைய ரவுடிகளை மாவட்ட வாரியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க 38 மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 110 சட்டப்பிரிவுகளின்படி அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் துணை கமிஷனர்கள் குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடிகளுக்கு நன்னடத்தை சான்றுகள் வழங்கி வந்தனர். மேலும் அந்த நன்னடத்தை சான்றை மீறி மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை சம்பந்தப்பட்ட எஸ்பிக்கள் மற்றும் துணை கமிஷனர்கள் ஓராண்டு வரை பிணை இல்லாத சிறை தண்டனை விதித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை அந்தந்த காவல் நிலையத்திலேயே எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

தற்போது சென்னை மாநகர காவல்துறையில் 3,800க்கும் மேற்பட்ட ரவுடிகள் புகைப்படம், குற்ற வழக்குகள் எண்ணிக்கை உள்ளிட்டவை ‘பறவைகள்’ செயலியில் பதிவேற்றம் செய்து போலீசார் கண்காணித்தும், நேரில் விசாரணை நடத்தியும் வருகின்றனர். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் உத்தரவுப்படி 21 ஆயிரம் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை எடுத்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,DGPs ,Maheshkumar Aggarwal ,Jayaraman ,Election Commission ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...