×

பறக்கும் படை கெடுபிடியால் மக்கள் பாதிப்பு; தேர்தல் நாளான ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதேநிலை தொடர்ந்தால் ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் கோயம்பேட்டில் நேற்று நடந்தது.

இதில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் தெருவோரங்களில் வியாபாரம் செய்கிற பூ வியாபாரிகள் முதல் மிக சாதாரண வியாபாரிகள், வணிகர்கள்கூட மிகப்பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், இதுபோன்ற செயல் வணிகர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருப்பதாகவும் அனைத்து வணிகர்களும் கருத்து தெரிவித்தனர். பிறகு கூட்டத்தில் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது: தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும் போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும், பொருள் இழப்போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையாக இன்றளவும் இருக்கிறது. தற்போது தேர்தலில் கையூட்டு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் அரசியல்வாதிகளால் எடுத்துச்செல்லப்படும் ரொக்கம் போன்றவை இதுவரை கைப்பற்றப்பட்டதாகவோ, பறிமுதல் செய்யப்பட்டதாகவோ எவ்வித தகவலும் செய்திகளும் இல்லை.

நேர்மையான வணிகம் செய்பவர்களின் அன்றாட செலவினங்களுக்காக எடுத்துச்செல்லும் ரொக்கமே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முரண்பாடான தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் தங்கள் வணிகத்தை தேர்தல் வரை தொடர்வது மிகவும் சவாலானதாகவே தெரிய வருகிறது. இது சம்பந்தமாக இன்னும் இரண்டு தினங்களில் மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவை மீண்டும் நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். தீர்வு எட்டப்படாமல், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தேர்தல் தேதியான ஏப்ரல் 19 வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு அங்கேயே வெளியிடப்படும் சூழல் உருவாகும் என எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post பறக்கும் படை கெடுபிடியால் மக்கள் பாதிப்பு; தேர்தல் நாளான ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,CHENNAI ,Tamil Nadu Federation of Merchants Associations ,President ,A.M. Wickramaraja ,Tamil Nadu Merchants' Associations ,
× RELATED வணிக உரிமம் புதுப்பித்தலுக்கு...