×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களுக்கு சிறை தண்டனை: 33 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்த 33 தமிழக மீனவர்கள் நேற்று காலை விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த மார்ச் 15ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோல் மார்ச் 16ம் தேதி ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற 21 தமிழக மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த 36 மீனவர்களையும் இலங்கை போலீசார் நேற்று காலை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி 36 மீனவர்களில் 33 பேரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் படகோட்டிகள் இருவருக்கு தலா 6 மாத சிறைத்தண்டனை, இரண்டாம் முறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழக மீனவர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட 33 மீனவர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகோட்டிகளுக்கு கடும் தண்டனைகள் தொடர்ந்து விதிக்கப்படுவது மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சமீபத்தில் சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களுக்கு சிறை தண்டனை: 33 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Tamil Nadu ,Lankan ,Karaikal ,Sri Lanka Navy ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!