×

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு: 3 பேர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சீட் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை தயாரித்த 3 பேர் கொண்ட பட்டியலில் மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதா பெயர் இல்லாத நிலையில், அவருக்கு எப்படி சீட் கிடைத்தது என்பது குறித்த தகவல் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுவதற்கு, சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிக்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர அய்யர், பிரவீன் சக்கரவர்த்தி, மூத்த தலைவர் தங்கபாலு, நாசே ராமச்சந்திரன், ராமசுகந்தன் போன்றவர்கள் டெல்லி மேலிடத்திடம் லாபி செய்தனர். இதனால் யாருக்கு சீட் வழங்குவது என்பதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதிரடியாக வழக்கறிஞர் சுதாவை மயிலாடுதுறை வேட்பாளராக மேலிடம் அறிவித்தது.

வழக்கறிஞரான இவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் உள்ளார். பல மூத்த தலைவர்கள் மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்ற போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் மேலிடம் சுதாவை வேட்பாளராக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழக தலைமை சிலருக்கு வாய்ப்பளிக்க கூறிய போதும், மேலிட தலைவர்கள் மாற்று வேட்பாளர்கள் சிலரை முன்னிறுத்தியுள்ளனர். இந்த பிரச்னைகளில் ராகுல்காந்தி தலையிட்டு சமரசப்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை டெல்லி தலைவர்களிடம் வழங்கிய 3 பேர் கொண்ட பட்டியலில் வழக்கறிஞர் சுதா பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேலிட செல்வாக்கு அவருக்கு முழுமையாக இருந்ததால் இந்த வாய்ப்பை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி, தங்களுக்கான கோட்டாவை கேட்டு கே.சி.வேணுகோபாலுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் மேலிட தலைவர்கள் அஜோய்குமார், ஸ்ரீவல்ல பிரசாத் உள்ளிட்டவர்கள் வழக்கறிஞர் சுதாவுக்கு பரிந்துரை செய்ததை தொடர்ந்து அவரது பெயர் ராகுல்காந்தியிடம் வழங்கப்பட்டது. பாதயாத்திரை தொடக்கம் முதல் ராகுலுடன் சுதா பயணித்து நல்ல பெயரை வாங்கியுள்ளார். இதனால் ராகுல்காந்தியும் உடனடியாக அவரது பெயரை டிக் செய்துள்ளார். இதனால் தான் இத்தனை மூத்த தலைவர்கள் முட்டி மோதியும் வழக்கறிஞர் சுதாவுக்கு சீட் வழங்கப்பட்டதாக காங்கிரசாரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

The post மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிப்பு: 3 பேர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சீட் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Sudha ,Mayiladuthurai ,Congress ,Chennai ,Tamil Nadu Congress ,Dinakaran ,
× RELATED அதிக வரிவசூல் தரும் தமிழ்நாட்டை...