×

தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை தீவிரம்

தேனி : தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பை-பாஸ் சாலையை அகலப்படுத்துவதற்கான பணியில் நெடுஞ்சாலைத் துறை தீவிரம்காட்டி வருகிறது.
தேனி நகர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பாண்டிச்சேரி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, சென்னை, தஞ்சை, நாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் வால்கரடு பகுதியை ஒட்டியுள்ள பை-பாஸ் சாலை வழியாக சுமார் 4 கிமீ தூரத்தை கடந்து அன்னஞ்சி பிரிவினை அடைந்து அங்கிருந்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் நான்கு வழிச்சாலையினை அடைந்து பஸ்கள் சென்று வருகின்றன.

தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அன்னஞ்சி பிரிவு வரை சுமார் 4 கிமீ தூரம் உள்ளது. இதில் அன்னஞ்சி பிரிவில் இருந்து புதிய பஸ்நிலையம் செல்லும் சாலையில் பாலம் பள்ளி அருகில் இருந்து சாலையின் இருபுறமும் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் உள்ளன. இதில் மாநில நெடுஞ்சாலைக்கு சாலை அமைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் அன்னஞ்சி பிரிவில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை உள்ள பை-பாஸ் சாலையை 7 மீட்டர் சாலையில் இருந்து 10.5 மீட்டர் தார்ச்சாலையாக அகலப்படுத்தி 3 மீட்டர் சோல்டர் சாலையுடன் சேர்த்து 13.5 மீட்டர் சாலையாக விரிவுபடுத்த மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதன்படி, அன்னஞ்சி பிரிவில் இருந்து பை-பாஸ் சாலையில் சிங்கப்பாறை அருகே உள்ள பாலம் பள்ளி வரை சாலை 10.5 மீட்டர் தார்சாலையாக மாற்றப்பட்டது.

ஆனால் பாலம் பள்ளியில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை உள்ள சுமார் 2 கிமீ தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தினால் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என காரணம் காட்டி வனத்துறை சாலையை அகலப்படுத்த தடை விதித்தது. இதனால் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு 7 மீட்டர் தார்ச்சாலையே இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே, 7 மீட்டர் தார்ச்சாலையை 10.5 மீட்டர் அகல தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமானது, தேனி நகர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேனி நகருக்கு செல்லும் பை-பாஸ் சாலையின் ஒரு புறம் வனத்துறைக்கு சொந்தமான உயரமான மேட்டில் இருந்து அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதை தடுக்க வனத்துறை அனுமதி பெற்று ரூ.3 கோடி செலவில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினை துவக்கி உள்ளது.
இப்பணியை துவக்கும்போதே மாநில நெடுஞ்சாலைத் துறை தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பை-பாஸ் சாலையில் அகலப்படுத்தப்படாமல் உள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையை அகலப்படுத்த வனத்துறையிடம் அனுமதி கேட்டது.

இதற்கு அனுமதி அளிக்கும் வகையில் வனத்துறை சார்பில், வனத்துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வனத்துறை இடத்தை சுற்றி வேலி அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ரூ.2 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என வனத்துறை நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை முதற்கட்டமாக வேலி அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சத்தை வனத்துறைக்கு செலுத்தியுள்ளது.

மீதமுள்ள ரூ.50 லட்சத்தை செலுத்துவதற்கான ஏற்பாட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. இத்தொகையை செலுத்தியதும், வனத்துறையானது வனத்துறைக்கு சொந்தமான இடத்தை குறிக்கும் வகையில் வேலி அமைக்கும் பணியை தொடங்க உள்ளது.இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனி உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி கூறியதாவது: தேனிபுதிய பஸ்நிலையத்தில் இருந்து அன்னஞ்சி பிரிவு வரை செல்லும் பை-பாஸ் சாலையில் சுமார் 2 கி.மீ. தூர சாலையை 7 மீட்டர் தார்ச்சாலையில் இருந்து 10.5 மீட்டர் தார்ச்சாலையாக விரிவுபடுத்த வனத்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக வனத்துறையினர் இச்சாலையில் ஒட்டியுள்ள வனத்துறை பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையாதபடி வேலி அமைக்கவும், சாலை அமைக்கும்போது, வனத்துறை இடத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை சுற்றிலும் வேலி அமைக்க நெடுஞ்சாலைத் துறை ரூ.2 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.

இதில் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத் துறை ரூ.1.50 கோடி செலுத்திவிட்டது. மீதம் ரூ.50 லட்சம்செலுத்த உள்ளது. இத்தொகை செலுத்தியதும், வனத்துறை வேலி அமைக்கும் பணியை தொடங்கும். வனத்துறை வேலி அமைத்ததும், விடுபட்ட 2 கி.மீ தூர சாலையினை 7 மீட்டரில் இருந்து 10.5 மீட்டர் அகல தார்ச்சாலையாக மாற்றும் வேலை துவங்கும். இதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Theni New Bus Stand ,Theni ,Theni Nagar New Bus Stand ,Periyakulam ,Theni Nagar New Bus Station ,Chennai ,Bengaluru ,Pondicherry ,Dindigul ,Tirupur ,Coimbatore ,Thanjavur ,Highways Department ,Theni New Bus Station ,Dinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு