×

நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை

*இரு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

ஊட்டி : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போதை பொருள் கடத்தல் மற்றும் மதுபானங்களின் விற்பனையை கண்காணிப்பது தொடர்பாக நீலகிரி மற்றும் மலப்புரம் மாவட்ட கலெக்டர்கள் ஊட்டியில் ஆலோசனை மேற்கொண்டனர்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கேரளா, கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, நீலகிரி மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் மலப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் வினோத் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், இரு மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது குறித்தும், பணப் பரிவர்த்தனைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதுபானங்களின் விற்பனையை கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவருவது குறித்தும், அனுமதியற்ற படைக்கலன்கள் குறித்த விவரங்களை இரு மாவட்டங்களுக்கிடையே பரிமாற்றம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மனித – வனவிலங்குகள் மோதலால் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளைக் கையாளுவது குறித்தும், இரு மாவட்ட எல்லைப்பகுதிகளிலும் நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர இயலாத (NBW) குற்றவாளிகள் தொடர்பான விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இரு மாவட்டங்களுக்கு இடையே மேற்கண்ட விவரங்களை பரிமாறிக்கொள்ள வசதியாக வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்குவது என்பது குறித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மலப்புரம் எஸ்பி சசிதரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், உதவி ஆட்சியர் (மலப்புரம்) சுனித் குமார் தாக்கூர், நிலம்பூர் துணை ஆணையர் (கலால்) ஷிபு, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், தேவாலா டிஎஸ்பி வசந்தகுமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி, மலப்புரத்தில் போதைப்பொருள் கடத்தல்,மது விற்பனை குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Malappuram ,Ooty ,Malappuram District Collectors ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்