×

ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ

*பல லட்சம் பொருட்கள் கருகி நாசம்

ஓசூர் : ஓசூர் அருகே, சாலையோரம் பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. வானில் பரவிய கரும் நச்சுப்புகையால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி கிராமத்தில் ராயக்கோட்டை-ஓசூர் மாநில நெடுஞ்சாலையோரம் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோன் வைத்துள்ளார்.

திறந்தவெளியில் பிளாஸ்டிக் கேன், பிளாஸ்டிக் பைகள், உடைந்த பொருட்கள் என பல டன் பிளாஸ்டிக் குவியலாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த குடோனில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. தீ மெல்ல மெல்ல பரவி, திறந்த வெளியில் கிடந்த பழைய பொருட்களில் பாதி அளவுக்கு எரியத்துவங்கியது.

சிறிது நேரத்தில் தீ பயங்கரமாக எரிந்ததால் வானுயரத்திற்கு கரும் புகைமூட்டம் காணப்பட்டது. சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக துர்நாற்றமும், சாலையில் வாகனங்களில் சென்றவர்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ appeared first on Dinakaran.

Tags : Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்