*விரைவில் அகற்றப்படுமா?
செய்துங்கநல்லூர் : கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பால பகுதியில் 3 மாதங்களாக தூண்களை சுற்றிக்கிடக்கும் மரங்களால் நீரோட்டம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க மரங்கள் விரைவில் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்தாண்டு டிச. 17,18 தேதிகளில் தொடர்ந்து அதி கன மழை பெய்தது. இதனால் பெருக்கெடுத்த வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அத்துடன் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்லும் குடிநீர் பைப்புகள் சேதமடைந்து ஒரு வார காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
ஆங்காங்கே சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதனால் மக்கள் பெரிதும்
சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து தமிழக அரசு அனைத்துத் துறைகளையும் மீட்பு பணிகளில் முடுக்கிவிட்டது. மக்கள் பிரதிநிதிகளும், அனைத்து அதிகாரிகளும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டன.
அத்துடன் பாதிக்கப்பட்ட அனைத்துப்பகுதிகளிலும் மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரமும் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் தற்காலிகமாக குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. தேவையான இடங்களில் புதிதாக பைப்லைன் அமைத்து குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு மேம்படுத்தி தரப்பட்டது.
இருப்பினும் கடந்தாண்டு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆற்றின் கரையோரங்களில் 500க்கு மேற்பட்ட கொடுக்காப்புளி மரங்கள் நின்ற மரங்கள் வெள்ளத்தின் போது முறிந்து முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் உள்ள பழைய பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 2 புதிய பாலத்திற்கு அடியில் உள்ள தூண்களை சுற்றி வளைத்து காணப்படுகின்றன. இவை பாலத்தை சேதப்படுத்தும் நிலையில் உள்ளதோடு நீரோட்டமும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் பருவகால மாற்றம் காரணமாக மீண்டும் கனமழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நேரத்தில் மணல் அரிப்பு ஏற்படும் அப்போது இந்த மரங்கள் பாலத்தின் தூண்களை சுற்றி இருப்பதால் தண்ணீர் இழுக்கும் நேரத்தில் பாலத்தை சேதப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து அந்தந்த கிராமங்களுக்கு குடிநீர் பைப் லைன்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த மரங்கள் தண்ணீரில் அடித்து செல்லும் பொழுது ஆற்றுக்குள் உள்ள ராட்சத குடிநீர் பைப்புகள், சிறிய வகை பைப்புகள் அனைத்தும் உடைந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
எனவே, கடந்தாண்டை போல் இந்தாண்டும் தாமிரபரணி ஆற்றில் ஏதேனும் பேரிடர் மற்றும் கனமழை- வெள்ளம் வருவதற்கு முன்பாக முறப்பநாட்டில் உள்ள 3 பாலங்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள குடிநீர் பைப்புகள் சேதம் அடையாமல் அதனை பாதுகாப்பதற்காக உடனடியாக இந்த மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், கள ஆய்வு மேற்கொள்வதோடு முறிந்தும், பாலத்தின் தூண்களை சுற்றியும் கிடக்கும் 500க்கும் மேற்பட்ட மரங்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இருந்து வருகின்றனர்.
The post 3 மாதங்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் தூண்களை சுற்றிக்கிடக்கும் மரங்களால் நீரோட்டம் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.