×

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.8 கோடி தங்கம் பறிமுதல்: 2 பெண் பயணிகள் கைது

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய 12 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக, 2 பெண் பயணிகளை கைது செய்தனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, சென்னையை சேர்ந்த 2 பெண் பயணிகள் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் சுற்றுலா பயணிகள் விசாவில், துபாய் சென்றுவிட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தனர். சுங்க அதிகாரிகள் இவர்களை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால், பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன், அந்த பெண் பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில், தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், மேலும் அந்த பெண் பயணிகளின் சூட்கேஸ்களை பரிசோதித்தனர். அதனுள் ரகசிய அறைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் மொத்தம் 12 கிலோ தங்கம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.8 கோடி. இதையடுத்து, 2 பெண் பயணிகளையும் கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த தங்கத்தை இவர்கள் யாருக்காக கடத்தி வருகிறார்கள், இந்த தங்க கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.8 கோடி தங்கம் பறிமுதல்: 2 பெண் பயணிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Meenambakkam ,Chennai airport ,Emirates Airlines ,
× RELATED குழந்தையின் பாலினத்தை சமூக...