×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்: ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபரப்பு கருத்து

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். மதுபான கொள்கை வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் மற்றவர்களைப் போலவே கெஜ்ரிவாலுக்கும் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உரிமை உண்டு என்று ஜெர்மனியின் வெளியுறவு அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியது.

இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. தற்போது அமெரிக்காவும் அதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து வருகிறது. சிறையில் உள்ள டெல்லி முதல்வருக்கு நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத்தில் சட்டஉதவி கிடைப்பதை உறுதி செய்ய இந்தியப் பிரதிநிதியை ஊக்குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதே போல்,’நீதித்துறையின் சுதந்திரம், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம்’ என்று ஜெர்மனியும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கெஜ்ரிவால் கைதை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று லோக் கல்யாண் மார்க் பகுதியில் அமைந்துள்ள பிரதமர் வீட்டை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதித்திருந்த போலீசார் லோக் கல்யாண் மார்க் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்திருந்த நிலையில், படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் தடையை மீறி பேரணி புறப்பட்டனர். இதில், பஞ்சாப் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல, கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகக் கோரி பாஜ சார்பில் டெல்லி ஐடிஓ பகுதியில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அவர்களை போலீசார் தண்ணீரை பீயச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

* இரண்டாவது உத்தரவு பிறப்பித்த கெஜ்ரிவால்
அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே கடந்த 24ம் தேதி கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தனது முதல் உத்தரவை பிறப்பித்தார். அதில், குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், டெல்லி அரசின் மொகல்லா கிளீனிக்குகளில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காண நேற்று 2வது உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்தார்.

இது குறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் அளித்த பேட்டியில், ‘‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிசோதனை வசதி மற்றும் மருந்துகள் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும்: ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்கா பரபரப்பு கருத்து appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Enforcement Directorate ,America ,Germany ,New Delhi ,US ,Chief Minister ,Delhi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...