×

காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது: தனிப்படை போலீசார் அதிரடி; தங்க நகைகள், பணம் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகை கடையில் கொள்ளையடித்த வழக்கில், ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் கடந்த பிப். மாதம் கடைசி வாரத்தில் ராஜேஷ் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. அதேபோன்று, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் மகாவீர் சந்த் (62) என்பவர் வசித்து வருகிறார். தரை தளத்தில் பி.எம்.தங்கமாளிகை என்ற நகைக் கடையும், மாடியில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி திருமண நிகழ்ச்சிக்காக மகாவீர் சந்த் குடும்பத்தினருடன் வெளியூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிகழ்ச்சி முடித்துவிட்டு மார்ச் 3ம் தேதி மாலை வீடு திரும்பிய மகாவீர் சந்த் வீட்டை திறக்க முற்பட்டபோது, திறக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, பூட்டு திறக்கும் ஆசாரியை வரவழைத்து பூட்டை திறந்துள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 1 கோடி மதிப்புள்ள 150 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மகாவீர்சந்த் இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட கொள்ளையனான கரி என்கின்ற சதீஷ் ரெட்டி (40) ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், டிஎஸ்பி முரளி தலைமையிலான போலீசார் புத்தூர் விரைந்து சென்று சதீஷ் ரெட்டியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 708 கிராம் தங்க நகை மற்றும் திருடிய நகைகளை விற்று வைத்திருந்த ரொக்கம் ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சதீஷ் ரெட்டியை காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உட்ளிட்ட 5 மாநிலங்களில் கொள்ளையன் சதீஷ் ரெட்டி மீது சுமார் 80 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் திருடுவதற்கு முன்பு அந்த பகுதியை நோட்டமிட்டது சிசிடிவி பதிவின் மூலம் தெரிய வந்து காவல்துறையின் விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவன் என கண்டறியப்பட்டது.

The post காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் ஆந்திராவில் பதுங்கி இருந்த கொள்ளையன் கைது: தனிப்படை போலீசார் அதிரடி; தங்க நகைகள், பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kanchipuram ,Buttur, Andhra Pradesh ,Kanchipuram Chandadi Temple Street… ,Andhra Pradesh ,
× RELATED 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு ஆந்திர...