×

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் தொடருவதால் இன்று முதல் 4 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தான் கோடை வெயில் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த வருடம் 2 மாதங்களுக்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பல்வேறு பகுதிகளில் பல நாட்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக பாலக்காடு, கண்ணூர், புனலூர் உள்பட பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் தொழிலாளர்கள் வேலை பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பொதுமக்கள் அதிக நேரம் நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா உள்பட சில பகுதிகளில் மழை பெய்தது.

ஆனால் அதன் பிறகும் வெப்பநிலை குறையவில்லை. நேற்று திருச்சூர் மாவட்டம் வெள்ளாணிக்கரை பகுதியில் அதிகபட்சமாக 39.9 டிகிரி செல்ஷியஸ் (103.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது. பாலக்காடு மற்றும் புனலூரில் 39 டிகிரி செல்ஷியசும், கண்ணூர் விமானநிலையத்தில் 37.2 டிகிரி செல்ஷியசும், கோழிக்கோட்டில் 37 டிகிரி செல்ஷியசும் வெப்பநிலை காணப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம் உள்பட 11 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது