×

3,936 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்

*சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது

சேலம் : நாடாளுமன்ற தேர்தலுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த 7,872 மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,260 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. நேற்று இவை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து விதமான முன்னேற்பாட்டு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரியப்படுத்தும் விவிபாட் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் ஆணைய குடோன்களில் இருந்து, சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்குள் வருகிறது. இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வைத்து வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, தொகுதிவாரியாக பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி, அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இப்பணியை ஆய்வு செய்தார். இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 14,56,299 ஆண்கள், 14,71,524 பெண்கள் மற்றும் 299 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 1,249 வாக்குச்சாவடி மையங்களில் 3,257 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில் 85 வயதிற்கு மேல் 25,577 வயது முதிர்ந்த வாக்காளர்களும், 25,160 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை, 8,23,336 ஆண்கள், 8,25,354 பெண்கள் மற்றும் 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் தொகுதியில் மட்டும் 605 வாக்குச்சாவடி மையங்களில் 1,730 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, 3,936 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,936 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,260 விவிபாட் எனப்படும், வாக்கு சரிபார்க்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் இடைப்பாடி, சங்ககிரி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் 2,091 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,091 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 2,263 விவிபாட் இந்திரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதையும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். அப்போது, டிஆர்ஓ மேனகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post 3,936 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...