×

கரூர் நகரப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் சத்து மிகுந்த கொடுக்காப்புளி விற்பனை ஜரூர்

கரூர் : கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகுந்த கொடுக்காப்புளி விற்பனை கரூரில் களை கட்டியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பின் உணவு பழக்கங்களில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நல்ல சத்தான உணவுகள் மற்றும் காய்கறிகளை விரும்பி வாங்கி வருகின்றனர் விலையை பற்றி கவலை கொள்வதில்லை. இதன் அடிப்படையில் நல்ல மருத்துவ குணம் மற்றும் உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொடுக்காப்புளி நல்ல உணவாக கருதப்படுகிறது.

கொடுக்காப்புளி எனப்படும் கோணப்புளி ஒரு பூக்கும் தாவரமாகும். இதன் காய்கள் பட்டாணி, அவரை போன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும், கிணற்று மேட்டிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகின்றன.
இதன் காய்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்வதைப் பார்க்கலாம்.

இது, கோணப் புளியங்காய், கோணக்காய், சீனிப்புளியங்காய், கொரிக்கலிக்கா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதனை நம் முன்னோர் மருந்தாக பயன்படுத்தினர். இதன் இலைகள் ஆடுகளுக்கு பசுந்தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. கொடுக்காய்ப்புளி பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாத்து நல்ல உறுதியை தருகிறது.

கொடுக்காய்ப்புளி காயில் உள்ள வைட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது.கொடுக்காப்புளி தற்போது விவசாயிகள் அதிக அளவில் வணிக பயிராக பயிர் செய்து வருகின்றனர். சுமார் மூன்று ஆண்டுக்குள் பயன் தரக்கூடிய தற்போது குட்டை ரக மரங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கொடுக்காப்புளி பழனி, உடுமலைப்பேட்டை ,தென்காசி மற்றும் ஒரு சில பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். பொதுமக்களும் கொடுக்காப்புளியை விரும்பி உண்பதால் தற்போது இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கரூரில் தற்போது பழனியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள கொடுக்காப்புளி கிலோ ரூ. 240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post கரூர் நகரப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் சத்து மிகுந்த கொடுக்காப்புளி விற்பனை ஜரூர் appeared first on Dinakaran.

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...