×

3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது

*திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர் : 3 ஆண்டுகளாக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வரை டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்து வந்தது. இதனால் 3 போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காதது மற்றும் பருவமழை பொய்த்தது போன்றவற்றால் 3 போக சாகுபடி 2 போகமாக மாறி அதன் பின் ஒருபோக சாகுபடியாக மாறி விட்டது.

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேலும் கடந்த 2022ம் ஆண்டில் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்தாண்டிலும் ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்பட்டது. இவ்வாறு 3 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்திலும், முன்னதாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலான பரப்பளளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் வழக்கமான குறுவை சாகுபடி பரப்பான 97 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலாக 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு என ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்று வருகிறது. அதேபோல் சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வருகிறது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள் மட்டுமே விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுப் பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியிருக்கின்றனர். இதன்படி நெல் சாகுபடியையடுத்து பச்சை பயறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டது, நல்ல விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக 45ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. இந் நிலையில் 3வது ஆண்டாக நடப்பாண்டிலும் அதே 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர்கள் தற்போது ஒரு மாத கால பயிர்களாக இருந்து வருகிறது. தற்போது அதற்கு நீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்வதற்கு பருத்தி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களை பயிரினை ஏக்கருக்கு ரூ.869 பிரீமியம் செலுத்தி வரும் 30ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை கூறியிருப்பதாவது,
விவசாயிகள் தங்களது பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ- அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த பருத்தி பயிர்களுக்கு சத்து பற்றாக்குறையால் ஏற்படும் பூ உதிர்வதை தடுப்பதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் நுண்ணூட்ட உரங்களை இட வேண்டும். இவ்வாறு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

The post 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Mettur dam ,Mettur ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...