×

சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்குமாறு கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் மனு தாக்கல் நடைமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தங்கள் கோரிக்கை மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை, அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. மதிமுக முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், இன்று தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கை விசாரித்தனர்.

அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் அவர்கள் கோரும் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார். மதிமுகவின் கோரிக்கை மீது இன்றே முடிவெடுக்கப்படும்,”என்று தெரிவித்தார். இதையடுத்து, பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது.

The post சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் : உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Court ,Chennai ,Chennai High Court ,Election Commission ,Election ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...