×

ஊட்டியில் ஒரே நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்ய குவிந்தனர் பாஜ – அதிமுகவினர் மோதல், தடியடி

* வேட்பாளர் எல்.முருகன், அண்ணாமலையால் பிரச்னை
* இரு கட்சியினரும் மறியல்
*2 மணி நேரம் தவித்த மக்கள்

ஊட்டி : ஊட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்ய அண்ணாமலை, எல்.முருகன் தாமதமாக வந்ததால், ஒரே நேரத்தில் அதிமுகவினரும், பாஜவினரும் மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து இரு கட்சிகளும் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் பொதுமக்கள் தவித்தனர்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிமுக மற்றும் பாஜ ஆகிய இரு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தன. இரு கட்சியினரும் ஊட்டி காபி அவுஸ் சதுக்கம் பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

காலை 11 மணிக்கு ஊர்வலமாக செல்ல பாஜவுக்கு போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். இதனால், பாஜ தொண்டர்கள் காபி அவுஸ் பகுதியில் கூடியிருந்தனர். ஆனால், பாஜ வேட்பாளர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்த நேரத்திற்கு வராத நிலையில், பாஜ ஊர்வலம் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பகல் 12 பணி ஆகியும் ஊர்வலம் புறப்படவில்லை. அதற்குள் காபி அவுஸ் பகுதியல் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் குவிந்தனர்.

இதனால் அதிமுகவினர் தங்களை அனுமதிக்கோரி போலீசார்ருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு கட்சியினரும் ஒரே இடத்தில் கூடியது மட்டுமின்றி, ஒருவருக்கு ஒருவர் எதிர் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் அங்கு வந்தனர். இதையடுத்து, பாஜவினர் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்கள் சென்ற ஒரு சில நிமிடங்களிலேயே அதிமுகவினரும் ஊர்வலமாக செல்லத் துவங்கினர். இரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள டிபிஓ சந்திப்பு பகுதிக்கு சென்றவுடன் அங்கிருந்து வேட்பாளர்கள் மற்றும் அவருடன் 4 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். மற்ற அனைவரும் டிபிஓ சந்திப்பு பகுதியில் கூடியிருந்தனர். அங்கும் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிர்கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதனை தடுக்க போலீசார் இரு தரப்பினரையும் கலைந்துச் செல்லும்படி கூறினர். ஆனால் இரு தரப்பினரும் கலைந்து செல்லாததால், லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்ேபாது, ஒரு சிலர் ஓடியபோது தவறி கால்வாயில் விழுந்து காயம் ஏற்பட்டது. அவர்களை ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பாஜவினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லும் மைசூர் மற்றும் கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமூக முடிவு எட்டியதால், இரு தரப்பினரும் கலைந்துச் சென்றனர். இந்த போராட்டத்தால், சுமார் 2 மணி நேரம் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் கூச்சலிட்ட மாவட்ட செயலாளர்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்பு மனுதாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வந்தார். ஆனால், உள்ளே பாஜ வேட்பாளர் எல்.முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்துகொண்டிருந்தனர். தங்களுக்கு நிர்ணயித்த நேரத்தில் பாஜவினர் வேட்பு மனுதாக்கல் செய்வதாக கூறி, கலெக்டர் அறைக்கு வெளியே அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கூச்சலிட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பவுர்ணமிதான் காரணம்

நேற்று முன்தினம் துவங்கி நேற்று பிற்பகல் 1 மணியுடன் பவுர்ணமி முடிந்தது. 1 மணிக்கு பின் தேய்பிறை தொடங்கியது. இதனால் எப்படியாவது 1 மணிக்குள் வேட்புமனுதாக்கல் செய்து விடலாம் என்று நினைத்து, பாஜவினர் மற்றும் அதிமுகவினர் போட்டிப்போட்டுக் கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதில், பாஜவினர் முந்திக்கொண்டு 1 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால், அதிமுகவால் 1 மணிக்குள் வேட்புமனுதாக்கல் ெசய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் கலெக்டர் அலுவலகத்தில் கூச்சலிட்டு பார்த்தனர். ஆனால், கடைசி வரை அவர்களால் 1 மணிக்குள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போலீசாருடன் அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்தார். காரில் அவருடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் என கூறி, காரை கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் தளவாய்சுந்தரம் சுந்தரம் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் போலீசாருடன் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் காரை நிறுத்திவிட்டு, கலெக்டர் அலுலவலகத்துக்கு நடந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதேபோல் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் வேட்பாளர் ஜெயபெருமாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வேட்பாளர் ஜெயபெருமாளுடன் நிர்வாகிகள் வெளியே சென்று விட்டனர். அப்போது 100 மீட்டர் அளவில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வந்த அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்கள் வாகனங்களை வேட்பாளருடன் விடவேண்டும் என தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.

பாஜ, அதிமுகவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு

வேலூர் தொகுதியில் பாஜ கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் நேற்று மதியம் தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுதாக்கல் செய்ய வரும் போது 3 வாகனங்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர்‌. இருப்பினும் கூடுதலாக மேலும் ஒரு வாகனத்தை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மனு தாக்கல் செய்துவிட்டு ஏ.சி.சண்முகம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அவரை பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் மலர் தூவி வரவேற்று கோஷம் எழுப்பினர்.

அதேபோல் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வந்தபோது 100 மீட்டருக்கு முன்பாகவே போலீசார் போரிகார்டு வைத்து வாகனத்தை நிறுத்தினர். இதையடுத்து அந்த கட்சியினர் வாகனங்களை அனுமதிக்க கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகளை தள்ளிக் கொண்டு போலீசார் பாதுகாப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது குடியாத்தம் டிஎஸ்பி ரவிசந்திரனின் சட்டையை பிடித்து அதிமுக பிரமுகர் ஒருவர் தள்ளிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் அதிமுக வேட்பாளர் பசுபதி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் திடீரென அதிமுக வேட்பாளரை ஆதரித்து கோஷம் எழுப்பினர். அதிமுகவினர் இரட்டை இலை குறிக்கும் வகையில் கைகளை காண்பித்தும், பாஜகவினர் தாமரை பூவை கையில் வைத்தும் கோஷயங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊட்டியில் ஒரே நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்ய குவிந்தனர் பாஜ – அதிமுகவினர் மோதல், தடியடி appeared first on Dinakaran.

Tags : Ooty ,BJP ,AIADMK ,L. Murugan ,Annamalai ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...