×

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

திருபுவனை, மார்ச் 26: புதுச்சேரி மாநிலம் திருபுவனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதகடிப்பட்டு ஏரிக்கரை அருகே சந்தேகத்துக்கிடமான 2 வாலிபர்கள் நின்றிருப்பதை பார்த்துள்ளனர். அப்போது அந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனே அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து, அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, 2 வாலிபர்களிடம் பாக்கெட்டில் 140 கிராம் அளவு கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து அதிரடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள பணங்குப்பம் திருமலை நகர் கனகராஜ் மகன் மாதேஷ் என்ற மாதேஸ்வரன் (23), கண்டமங்கலம் அருகே உள்ள கொண்டியங்குப்பம் கங்கை அம்மன் கோயில் தெரு சக்திவேல் மகன் சதீஷ் என்ற பிரவீன் (22) என்பதும், கூலி வேலை செய்யும் இவர்கள் கூடுதல் பணம் கிடைப்பதற்காக கஞ்சா விற்கும் தொழிலில் ஈடுபட்டதும், பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவர் மீதும் கஞ்சா தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து அவர்களை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை appeared first on Dinakaran.

Tags : Thiruphuvanai ,Tirupuvanai police station ,Puducherry ,Sub-Inspector ,Ilango ,Tirupu ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு