×

இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ரெக்கார்டிங்க் நிறுவனம் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் விலகினார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின், 4,500க்கும் மேற்பட்ட பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக கூறி, எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்ற இந்த பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று எக்கோ நிறுவனத்தின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சுப்ரமணியன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ரெக்கார்டிங்க் நிறுவனம் வழக்கு: விசாரணையில் இருந்து நீதிபதி விலகல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Chennai ,High Court ,Judge ,R. Subramanian ,
× RELATED காப்புரிமை ஒப்பந்தம் தொடர்பான வழக்கு:...