×

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்: நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திருநெல்வேலி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இன்று நடைபெறது. இதில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
தி.மு.க. மத்தியில் ஆட்சி செய்த கட்சி அல்ல. ஆனால், ஆட்சிகளில் பங்கேற்ற கட்சி. நாங்களே தமிழ்நாட்டிற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்திய அரசு செலவு செய்த திட்டச்செலவுகளில் 11% தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கொண்டுவந்தோம். தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெரும் கனவை கலைஞர் நினைவாக்கினார்.

தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. கொண்டுவந்த திட்டங்கள் என்ன? பிரதமர் மோடி பட்டியலிட கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் வெறுத்த வஞ்சித்த மோடி போன்ற பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை கிடையாது. மோடி அவர்களே நீங்கள் வடிக்கும் கண்ணீரை உங்கள் கண்களே நம்பாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கான நிதியையும் வழங்காமல் நம் மக்களை ஏளனம் செய்கின்றனர். கேளி கிண்டல் பேசுகின்றனர்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதியும் தரமாட்டார்களாம். மாநில அரசே மக்களுக்கு நிவாரண நிதி வழங்கினால் அதை பிச்சை என்று ஏளனம் செய்கிறார்.நிதியமைச்சருக்கு நான் கூறுவது என்னவென்றால் அரசு செலவும் செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் பணம். மக்கள் கஷ்டப்படும்போது மக்களுக்கு உதவுவதுதான் அரசின் கடமை. மக்களாட்சியில் மக்களை அவமதித்த உங்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருமுறையாவது மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் உங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனர் என்று அப்போது தெரியும்.

அதன்பிறகு பிச்சை என்ற வார்த்தை உங்களுக்கு நியாபகத்திற்கு வராது.மற்றொரு பா.ஜ.க. அமைச்சர் தமிழர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டுகிறார். தமிழர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம், வெறுப்பு, வன்மம். மக்களிடம் வெறுப்பை விதைத்து பிளவுகளை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் பா.ஜ.க. எண்ணங்கள் ஒருபோதும் பலிக்காது. மேம்பட்ட சிந்தனையுள்ள நாம் நமது சகோதர, சகோதரிகளுக்கு வழிகாட்ட வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்று எடுத்து கூற வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது எதிர்க்கால சந்ததியினருக்கு அளிக்கும் துரோகம் என்று புரியவைக்க வேண்டும். தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த சிறப்பு திட்டங்கள் என்ன? என் கேள்விக்கு என்ன பதில். பதில் சொல்லுங்கள் பிரதமர் மோடி. எங்கள் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசாதான் திரும்பி வருகிறது. அதை கேட்கிறோம். அதற்காவது பிரதமர் மோடி பதில் வைத்துள்ளாரா?

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அதற்கு சமீபத்திய உதாரணம் மணிப்பூரில் நடந்த கலவரம். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒற்றுமையாக வாழும் இந்தியாவை வெறுப்பு விதைகளை தூவி நாசம் செய்துவிடுவார்கள். சில நாட்களுக்கு முன்னால் கன்னியாகுமரிக்கும், திருநெல்வேலிக்கும் பிரதமர் மோடி வந்திருந்தார். தேர்தல் வந்துவிட்டதால் இங்கு வந்து செல்லும் பிரதமர் மோடி வெள்ளம் வந்தபோது எங்கு இருந்தார்.

2 இயற்கை பேரிடர் அடுத்தடுத்து தமிழ்நாட்டை தாக்கியது. பிரதமர் மோடி ஒருபைசாவாவது கொடுத்தாரா? இல்லை.பிரதமர் மோடி நிதிதான் தரவில்லை, ஓட்டுக்கேட்டு வந்தபோது மக்களுக்கு ஆறுதலாவது கூறினீர்களா? இவ்வாறு முதல்வர் கூறினார்.

The post மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்: நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,Chief Minister ,MLA ,Nanguneri K. Stalin ,Tirunelveli ,Thi. M. K. ,Congress ,Nanguneri, Tirunelveli district ,Tirunelveli Constituency Congress ,Robert Prause ,Kanyakumari Constituency Congress ,MLA Nanguneri K. Stalin ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...