×

குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம் என்பது குறைவாகதான் உள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையின் அகலம் குறைவாகவே உள்ளது. இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது. விபத்துக்களை தவிர்க்க சாலையின் நடுவே சென்டர் மீடியன்களை காவல்துறை அமைத்துள்ளது.

முன்பு கம்பிகளால் அமைக்கப்பட்டு வந்த சென்டர் மீடியன் தற்போது காங்கிரீட் கட்டைகளால் அமைக்கப்பட்டு வருகிறது. விபத்துக்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள இந்த சென்டர் மீடியனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் முன்பு செல்லும் வாகனங்களை முந்தி செல்லும் வாகனங்கள் இந்த சென்டர் மீடியனில் மோதும் நிலை இருந்து வருகிறது. இந்த தவிர்க்கும் வகையில் சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ள இடத்தில் தற்போது மஞ்சவண்ணங்களில் எச்சரிக்கை போர்டுகளை தேசியநெடுஞ்சாலைத்துறை வைத்துள்ளது. இதனால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் கனிமவளங்களை ஏற்றிசெல்லும் டாரஸ் லாரிகளால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

அதிக வேகமாக செல்லும் இந்த வாகனங்களால் உயிர்பலிகளும் அதிகம் ஏற்பட்டு வருகிறது. கனிவவளங்களை ஏற்றி செல்லும் டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியால் அவர்கள் அதிக வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால் கனிமவளங்களை ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரிகள் மாநகர பகுதியில் அதிக வேகத்தில் செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் இந்த லாரிகள் வரும்போது மற்ற வாகன ஓட்டிகள் பயந்து சாலையின் ஓரம் ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகர பகுதியில் சாலை விதிமுறைகளை மீறும் லாரிகள் மற்றும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நேற்று இரவு கிருஷ்ணன்கோவில் அருகே கனிமவளங்களை ஏற்றி சென்ற லாரி, அந்த வழியாக சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்றவர் கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிஷ்டவசமாக காயங்கள் ஏதும் இன்றி உயிர் தப்பினார். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, டாரஸ் லாரி லாரியில் இருந்து கீழே இறங்கி வந்து பைக் ஓட்டி வந்த நபரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இப்படி பல்வேறு இடங்களில் தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருகிறது.

சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயங்கும்போது விபத்துக்களை குறைக்கலாம். கேரள மாநிலத்தில் இந்த வேகத்தில்தான் இந்த சாலையில் செல்லவேண்டும் என அறிவிப்பு பலகை வைத்து இருப்பார்கள். அந்த வேகத்தை கடந்து செல்லும்போது, விதிமுறையை மீறும் வாகனத்திற்கு காவல்துறை சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கின்றனர். இதனை குமரி மாவட்டத்திலும் காவல்துறை நடமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து appeared first on Dinakaran.

Tags : Taurus ,Kumari ,Nagercoil ,Kumari district ,Thiruvananthapuram National Highway ,Dinakaran ,
× RELATED ரிஷபம்