×

வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலையில் நான்குவழி சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வரையும், கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரையும் நான்கு வழிச்சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இதில் காவல்கிணறு முதல் அப்டா மார்க்கெட் வரை உள்ள நான்குவழிசாலை பணி முடிந்து போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல்லும் பயண நேரம் குறைந்துள்ளது.

தற்போது கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் நான்குவழிச்சாலை பணி வேகமாக நடந்து வருகிறது. காவல்கிணறு முதல் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வரை திறக்கப்பட்டுள்ள நான்குவழிச்சாலையில் முக்கியமான சாலைகள் குறுக்கே வருகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்துக்குள் ஏற்படாத வகையில் தேசியநெடுஞ்சாலை துறையினர் பேரிகார்டு அமைத்து வாகனம் மெதுவாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும் சில நேரங்களில் பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக நான்குவழிச்சாலையில் தேரேகால்புதூர் பகுதியில் சுங்கசாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதனை கடந்த உடன், வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலை குறுக்கே செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. இங்கு குலசேகரம்புதூர், ஆண்டார்குளம், ராமபுரம், கொத்தன்குளம், சங்கரன்புதூர், பத்மநாபன்புதூர், மருங்கூர், தேரூர் செல்லும் வழி உள்பட பல ஊர்களுக்கு இந்த சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் அரசு போக்குவரத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளமடம், குலசேகரம்புதூர் சாலை எப்போதும் பரபரப்பாக இருந்து வருகிறது. நான்குவழிசாலையில் உள்ள சுங்கசாவடியில் வாகனங்கள் நின்று செல்லும்போது வாகனத்தை வாகன ஓட்டிகள் வேகமாக இயக்குகின்றனர். சுங்கசாவடி கடந்தவுடன் இந்த வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலை குறுக்கே வருவதால், வாகனஓட்டிகள் சிறிது தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கபாதை அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை செல்கிறது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பார்கள் என நினைத்தோம். ஆனால் மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இந்த சாலையை கடக்கும்போது மிகவும் சிரமமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்குவழிச்சாலையை கடந்த அரசு பஸ் மீது லாரி மோதியது.

இதில் அதிர்ஷ்டவசமாக எந்த பயணிகளுக்கும் காயம் இல்லை. பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலை குறுக்கே செல்லும் பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கபாதை அமைத்துக்கொடுத்தால் வாகனஓட்டிகளுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. இதுபோல் ஆரல்வாய்மொழி பகுதியில் குமாரபுரம் பகுதியிலும் நான்குவழிச்சாலையின் குறுக்கே ஆரல்வாய்மொழி குமாரபுரம் சாலை குறுக்கே செல்கிறது. இந்த பகுதியிலும் மேம்பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும். என்றனர்.

The post வெள்ளமடம் குலசேகரம்புதூர் சாலையில் நான்குவழி சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kulasekarambudur Road ,Nangkuzhi Road ,Nagarko ,Kumari district ,Kavalkinaru ,Oshuginaseri Apta Market ,Kanyakumari ,Thiruvananthapuram ,Apta Market ,Dinakaran ,
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா