×

வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை; தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக எம்பிக்கள்: அரசியல் களத்தில் பரபரப்பு

சென்னை: வட மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை வீசித் தொடங்கியுள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடாமல் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டும், போட்டியில்லை என்று அறிவித்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 134 தொகுதிகளில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மட்டும் ஒரு சில தொகுதிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதுவும் கடந்த முறை வென்றதுபோல இல்லாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனால் ஒரு சீட் கூட கிடைக்காது என்று கூறப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் எதிர்ப்பு அலை கடுமையாக வீசுகிறது. இதனால் தென் மாநிலங்களில் உள்ள 134 தொகுதிகள் மீதும் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை.

அதேபோல வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்களில் பாஜக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து விட்டு தேர்தலில் இருந்தே ஒதுங்கிவிட்டது. அதேபோல கடந்த முறை வெற்றி பெற்ற மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தேர்தலில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. இதனால், குஜராத், உபி ஆகிய மாநிலங்களை மட்டுமே பாஜக நம்பியுள்ளது. இதனால் பல மாநிங்களில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே பலரும் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டனர். மேலும் பலர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு ஒதுங்கியுள்ளனர். இதனால்வ வட மாநிலங்களில் அடுத்தடுத்து விலகும் பாஜக எம்பிக்களால் தேர்தல் களத்தில் கடும் பரபரப்பு எழுந்துள்ளது.

அதில், பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின்வாங்கியவர்களில், குஜராத் மாநிலத்தில் வதோதரா தொகுதியில் ரஞ்சன்பென் தனஞ்செய்பட், சபர்கந்தா தொகுதியில், பிகாஜி தாகூர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தங்களுக்கு சீட் வேண்டாம். தேர்தலும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர். அதேபோல, உத்தர பிரதேசம் மாநிலம், பாராபங்கி தொகுதியில், உபேந்திரசிங் ராவத், கான்பூர் தொகுதியில் சத்யதேவ் பச்சௌரி ஆகியோர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு சீட் வேண்டாம் என்று ஒதுங்கியுள்ளனர்.

இது தவிர தற்போது எம்.பி.யாக பதவி வகிக்கும் சிலர் பாஜக சார்பில் போட்டியிடப் போவதில்லை என்று தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே பின்வாங்கியுள்ளனர். அவர்களில், புதுடெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்ஸ்வர்தன், முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மகன், ஜெயந்த் சின்ஹா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங், ராகுல் கஸ்வான், பச்சே கௌடா, அஜய் பிரதாப் சிங், பிரிஜேந்திர சிங், குனார் ஹெம்ப்ராம் ஆகியோர் விலகியுள்ளனர். வட மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியுளளதால்தான் பல எம்பிக்கள் சீட்டே வேண்டாம் என்று அறிவித்து விட்டு ஓடத் தொடங்கியுள்ளனர் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

The post வடமாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை; தேர்தலில் இருந்து அடுத்தடுத்து விலகும் பாஜக எம்பிக்கள்: அரசியல் களத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Anti-Modi wave in northern ,states ,BJP ,Chennai ,Modi ,northern ,southern ,Andhra ,Anti-Modi wave in ,Northern states ,
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...