×

தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்தது ஒன்றிய அரசு

*தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

மதுரை : மதுரையில், நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கைளை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ல் நடக்கிறது. இதையொட்டி திமுக சார்பில் தேர்தல் பிரசார பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம், விருதுநகர், தேனி நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அடுத்ததாக நேற்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னர் மதுரை வந்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசனை ஆதரித்து ஊமச்சிகுளம் மற்றும் கோ.புதூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோர் இப்பிரசாரத்திற்கு முன்னிலை வகித்தனர். இப்பகுதிகளில் திரண்டிருந்து ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். இது தேர்தல் பிரசாரக்கூட்டம் அல்ல. ெவற்றி விழா கூட்டம். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப நீங்கள் தயாராக உள்ளீர்கள். கடந்த முறை சு.வெங்கடேசன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த முறை குறைந்தது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஒரு முறை மட்டும் மோடி வந்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அவர் வைத்த ஒத்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டேன். மருத்துவமனை கட்டி முடியும் வரை அதனை திருப்பித்தர மாட்டேன். இதற்கிடையே தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வந்துள்ளபோது, எய்ம்ஸ் வரும் என்கிறார் மோடி. மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டி திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு எதையும் காணவில்லை.

அதேபோல் முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இருந்த அடிமைகள் ஒன்றிய பாஜவிடம் மாநில உரிமைகளை அடகு வைத்தனர். தமிழ்வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு பூஜ்ஜியம் தொகை ஒதுக்கியது. சமஸ்கிருதம், இந்தி வளர்ச்சிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்தது. புதிய கல்விக்கொள்கை திட்டம் கொண்டு வந்துள்ளனர். இதனால் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கும். தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத்தேர்வை கலைஞர் ரத்து செய்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வு நுழையவில்லை. அவர் மறைந்த பிறகு ஒன்றிய அரசு தந்த அழுத்தம் காரணமாக அதிமுக அடிமைகள் தமிழ்நாட்டிற்குள் நீட் கொண்டு வந்துள்ளனர். நீட் தேர்வால் கடந்த 8 வருடத்தில் மட்டும் 22 பேர் இறந்துள்ளனர். இந்தியா கூட்டணி வெற்றி பெறறால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று வந்த முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

மகளிருக்கு கட்டணம் இல்லாத பேருந்து வசதி திட்டத்தில் இயங்கும் பஸ்களை ‘ஸ்டாலின் பஸ்’ என அன்புடன் கூறுகின்றனர். தேர்தல் அறிக்கையில் சொல்லாதது காலை உணவு திட்டம். அதையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இத்திட்டத்தை மாணவர்கள், பெற்றோர் வாழ்த்துகின்றனர். தேர்தல் முடிந்ததும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் ரூ.1000 பெற்றுத்தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

மதுரை மாவட்டத்தில் நடந்த அமைச்சரின் பிரசார பயணத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன், மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஜோயல், இன்பாரகு, ஜிபிராஜா, இலக்கிய அணி துணை செயலாளர் நேரு பாண்டியன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் பூபதி, மேற்கு ஒன்றிக்குழு தலைவர் வீரராகவன், கிழக்கு ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டியன், கவுரிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் சிறைசெல்வம். முகம்மதுஅப்துல்காதர், மேலூர் நகர செயலாளர் யாசின், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி, ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கோதை மலைவீரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன் முத்துராமங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராம், தனசெல்வம், மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு, இளைஞர் அணி அமைப்பாளர் சௌவுந்திரராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மோடி வரவில்லை… நிதி தரவில்லை…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தற்போது தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அதிக முறை வருகிறார். டிசம்பரில் புயலால் சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. முதல்வர் உள்பட அனைவரும் மக்கள் பணி செய்தோம். மோடி வரவில்லை. வெள்ள நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் முதல்வர் கேட்டார். அவர்கள் தரவில்லை. ஆனால் பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிவாரண நிதியை வாரிக்கொடுக்கின்றனர். தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் ரூ.1 வரி செலுத்தினால் 28 பைசா மட்டுமே திரும்ப தருகின்றனர். எனவே இனி நீங்கள் அனைவரும் மோடியை ‘மிஸ்டர் 28 பைசா’ என்று அழைக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும் அவர் பிரதமர். பிறகு வேறு பிரதமர் வந்து விடுவார்’’ என்றார்.

The post தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamilnadu ,Minister ,Udhayanidhi Stalin ,Madurai ,Sports ,S.Venkatesan. ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...