×

சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோடைகால குடிநீர் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை

*ஆணையர் அருணா அதிகாரிகளுக்கு உத்தரவு

சித்தூர் : சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோடைக் கால குடிநீர் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில், வடிகால் துறை மற்றும் பொறியியல் துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் அருணா நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கோடை தொடங்க உள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அப்போது அவர் பேசியதாவது:

சித்தூர் மாநகரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க பொறியாளர், அலுவலர்கள், வார்டு, குடிநீர் வசதிச் செயலாளர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோடையில் மாநகர மக்களுக்கு குடிநீர் பிரச்னையின்றி வழங்க செயல் திட்டம் தயாரிக்க வேண்டும். மாநகரத்திற்கு கல்வகுண்டா நீர்த்தேக்கம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குடிநீர் வசதித்துறை செயலாளர்கள் தங்கள் வார்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது ஆழ்துளை கிணறுகளில் வரும் தண்ணீரின் கொள்ளளவு எவ்வளவு? மாநகரத்தில் ஆழ்துளை கிணறுகள் எத்தனை உள்ளன? என்ற முழுமையான அறிக்கையை வழங்க வேண்டும். குடிநீர் பைப்களில் கசிவு மற்றும் இதர பழுதுகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்து, உரிய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்தூர் மாநகரத்தை பொருத்தவரை பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கோடை காலத்தில் குடிநீர் வழங்க வடிகால் வாரிய துறை அதிகாரிகள் மற்றும் பொறியியல் துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட வேண்டும். எந்த ஒரு பகுதியிலும் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் எம்இ கோமதி, டிஇக்கள் வெங்கட பிரசாத், ரமணா மற்றும் வார்டு செயலாளர்கள் பங்கேற்றனர்.

The post சித்தூரில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கோடைகால குடிநீர் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Commissioner ,Aruna ,Chittoor Municipal Office ,Department of Drainage and Engineering ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து...