×

பில்லூர் அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம்

*அப்பர் பவானி, அவலாஞ்சி அணைகளில் அதிகாரிகள் ஆய்வு

மஞ்சூர் : பில்லூர் அணை வறண்டு போனதால் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பர் பவானி, அவலாஞ்சி அணைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டத்தில் குந்தா நீர் மின் திட்டத்தின் குந்தா, கெத்தை, பரளி, அவலாஞ்சி, காட்டுக்குப்பை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் உள்ளது. இதில் பரளி மற்றும் பில்லுார் மின் நிலையங்கள் கோவை மாவட்டத்திலும் மற்ற மின் நிலையங்கள் நீலகிரி மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

மஞ்சூர் அருகே அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின்சார நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின்சார உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அனைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சார உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கெத்தை மின் நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து பரளி மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வௌியேறும் மீண்டும் சுரங்கபாதை வழியாக பில்லுார் அணையை சென்றடைகிறது.

பில்லுார் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி மற்றும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளின் முக்கிய குடிநீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்தாண்டு போதிய அளவில் பருவமழை பெய்யாமல் போனதாலும் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை மழை பெய்யாமல் உள்ளதாலும் நீலகிரியை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலை சரிவுகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆறுகள். சிற்றோடைகள், அருவி களில் அறவே நீர் வரத்தின்றி வறண்டு போயுள்ளது. குறிப்பாக மின் உற்பத்திக்கான அணைகளில் நீர் மட்டம் பெருமளவு குறைந்துள்ளது.

பெரும்பாலன மின் நிலையங்களில் அணைகளில் உள்ள நீரின் அளவை பொறுத்தே குறிப்பிட்ட அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு சரிந்ததாலும் பில்லூரை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின்மையால் அணை வறண்டு நீர் மட்டம் அடியோடு குறைந்து போயுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பில்லூர் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பில்லூர் அணை வறண்டதால் கோவை மாநகராட்சிகு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இனிமேலும் மழை பெய்யாத பட்சத்தில் வரும் நாட்களில் வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரித்து குடிநீர் பிரச்னை கடுமையாகும் என அஞ்சப்படுகிறது. இதை தொடர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நீலகிரியில் உள்ள அணைகளில் இருந்து பில்லூர் அணைக்கு தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் கோவை மாநகராட்சி உயரதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி அணை பகுதிகளுக்கு சென்று அணைகளில் உள்ள நீரின் இருப்பை நேரில் ஆய்வு செய்தனர். அப்பர் பவானி அணையில் உள்ள நீரின் மூலம் அவலாஞ்சி, குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களை இயக்கி அதன் மூலம் பில்லூர் அணைக்கு நீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

The post பில்லூர் அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Pillur dam ,Upper Bhavani ,Avalanchi Dams Manjoor ,Coimbatore Corporation ,Avalanchi ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது