×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்விளக்கம்

* தபால் வாக்கு படிவங்கள் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 11,400 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதனை. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.மகளவைத் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தேர்தல் முன்னேற்பாடுள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 11.400 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கான தேர்தல் பணி ஆணை ரேண்டம் குறையில் ஏற்கனவே வழங்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலசபாக்கம் செழியன் பெண்கள் கலைக் கல்லூரி, ஜமுனாமரத்தூர் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு தாலுகாவுக்கு போளூர் டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி. செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வெம்பாக்கம் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லூரி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்தல் பயிற்சி வகுப்பை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மின்னணு செயல்விளக்க பயிற்சியை முறையாக கவனித்து, ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கடமைகளை உணர்ந்து, எவ்வித சர்ச்சையும் ஏற்படாதபடி வாக்குப்பதிவு நேர்மையான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், வாக்குப்பதிவு மையத்துக்கு செல்லும் முன்பு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள கையேடுகளை முழுமையாக படித்து தெளிவு பெற வேண்டும் என்றார். எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுத்த வேண்டும். அதேபோல், தபால் வாக்குகளை இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, பயிற்சி நடைபெறும் மையத்திலேயே செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். எனவே, அதற்கான படிவங்களை முறையாக பூர்த்தி செய்து அளிப்பது அவசியம் என்றார்.

ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போளூர்: ஆரணி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இப்பயிற்சியில் 1,747 பேர் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட வருவாய் அலுவலரும், ஆரணி மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார் சிவலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், தேர்தல் துணை தாசில்தார் சுசிலா உட்பட பலர் உடனிருந்தனர்.

கலசபாக்கம்: கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 530 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள கல்லூரியில் நடந்தது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் ராஜராஜேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர். மேலும், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவை கலெக்டர் சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தாசில்தார் சரளா தலைமையில் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மண்டல துணை தாசில்தார் மாலதி, துணை தாசில்தார் (தேர்தல் பிரிவு) தனபால், தலைமையிடத்து துணை தாசில்தார் வேணுகோபால் உடனிருந்தனர்.

செங்கம்: செங்கம் தாலுகாவில் நடந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பிற்கு உதவி தேர்தல் அலுவலர் தீபசித்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன் முன்னிலை வகித்தார்.
தேர்தல் பிரிவு தாசில்தார் திருநாவுக்கரசு வரவேற்றார். இதில், 1,271 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதேபோல், தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன், வட்டார கல்வி அலுவலர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Tiruvannamalai ,Bhaskara Pandian ,
× RELATED கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான