×

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு

 

தர்மபுரி மார்ச் 25: தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர், வீட்டிலிருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க படிவம் 12டி வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வயது மூப்பு மற்றும் இயக்க குறைபாடுகள் காரணமாக, யாரும் வாக்களிக்காமல் இருக்க கூடாது என்பதற்காக, 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்குகளை செலுத்தும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, 100 வயதை கடந்த 114 பேர், 85 வயதை கடந்த 13,394 பேர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் 13,367 பேர் உள்ளனர். இவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 26,875 பேர் உள்ளனர். இவர்களுக்கென நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 12டி விண்ணப்ப படிவங்களை, சம்பந்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கியுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று, அத்தியாவசிய பணிகளின் நிமித்தமாக நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாக்களிக்கும் வகையில், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சல் வாக்கு சீட்டு மூலம் வாக்களிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் பணியாளர்கள் 12டி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர்களின், துறை தலைவர் சான்று அளித்து மேலொப்பம் செய்யப்பட்டு, இன்று (25ம் தேதி) சம்மந்தப்பட்ட துறைகளின் தலைவர்கள் மூலம், தர்மபுரி கலெக்டரிடம் அளிக்க வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்யும் யாவருக்கும் அஞ்சல் வாக்குச்சீட்டு வழங்கப்படும். இவர்கள் தர்மபுரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை செயல்பட உள்ள தபால் வாக்கு செலுத்தும் மையத்தில், நேரில் வந்து வாக்கினை அங்குள்ள பெட்டியில் செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடும் பணியாளர்கள், தங்களது துறை அலுவலர் வழியாக இன்று(25ம் தேதி) 12டி விண்ணப்ப படிவங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் தகராறு செய்த கணவனை...