×

கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி

 

ரெட்டிச்சாவடி, மார்ச் 25: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த நல்லவாடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (37). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு தினகரன்(17) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினகரன் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்துள்ளார். கடந்த 22ம் தேதி நடந்த முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிவிட்டு, தற்போது விடுமுறையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது சக நண்பர்களுடன் கடலில் குளிப்பதற்காக நல்லவாடு பகுதிக்கு சென்றுள்ளார். நண்பர்களுடன் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தார் அப்போது எழுந்த ராட்சத அலை தினகரனை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் கண் எதிரே தினகரனை ராட்சத அலை இழுத்து சென்றதைப் பார்த்து கூச்சலிட்டனர். அங்கிருந்த மீனவர்கள் ரெட்டிச்சாவடி போலீசுக்கும், சக மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்தும், வலை போட்டும், படகுகள் மூலமாகவும் தினகரனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு கடற்கரையோரமாக தினகரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

தினகரன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : sea wave ,Redtichavadi ,Kalaiyarasan ,Nallavadu Mariamman Koil Street ,Redtichavadi, Cuddalore district ,Kavita ,Dinakaran ,wave ,
× RELATED ரெட்டிச்சாவடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை