×

வெங்கத்தூர் ஏரியின் கரையினை உடைத்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

 

திருவள்ளூர், மார்ச் 25: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் ஏரி ஒன்று உள்ளது. இந்த வெங்கத்தூர் ஏரியினை புனரமைக்கும் பணி செய்ய சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி வெங்கத்தூர் ஏரியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி புனரமைக்கும் பணி செய்ய ஒரு வருட காலம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை பணியின் விவரம் அறிக்கையில் புகைப்பட நகலுடன் திருவள்ளூரில் உள்ள நீர்வளத்துறை, பாசனப்பிரிவு – 2 உதவி பொறியாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் வெங்கத்தூர் ஏரியின் கரைக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த கூடாது. ஏரியில் உள்ள நீரை மாசுபடுத்த கூடாது. ஏரியில் உள்ள கட்டுமான பணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தனியார் நிறுவனம் இந்த நிபத்தனைகளை கடைபிடிக்காமல் ஏரியில் உள்ள சவுடு மண்ணை இரவு நேரங்களில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக கரையை உடைத்து சாலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மேற்படி நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், மண் வளத்தையும், நீர் வளத்தையும் பாதுகாக்க தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வெங்கத்தூர் ஊராட்சி விவசாயிகள் கலெக்டர் த.பிரபுசங்கரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

The post வெங்கத்தூர் ஏரியின் கரையினை உடைத்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Venkathur Lake ,Thiruvallur ,Public Works Department ,Vengathur Panchayat ,Tiruvallur ,Kadampathur Union ,Chennai ,
× RELATED தொழுவூர் கிராம ஏரியில் தேசிய...