×

பதவி விலகக் கோரும் பாஜவுக்கு பதிலடி அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வராக பணியை தொடர்கிறார்

புதுடெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே, டெல்லி முதல்வர் என்ற அடிப்படையில் கெஜ்ரிவால், மாநிலத்தின் குடிநீர் பிரச்னை குறித்து முதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் வரும் 31ம் தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி கைது செய்தது. வரும் 28ம் தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த கைது சட்டவிரோதமானது என கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அடுத்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நேற்றும் 3வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையில் இருந்தபடியே, டெல்லி முதல்வர் என்கிற அடிப்படையில் கெஜ்ரிவால் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அம்மாநில அமைச்சர் அடிசி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கெஜ்ரிவால் எனக்கு கடிதம் மூலமாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த கடிதத்தை முதலில் படித்த போது அழுதே விட்டேன். என்ன மனிதர் இவர்? சிறை வைக்கப்பட்ட நிலையிலும் டெல்லி மக்களின் குடிநீர், கழிவு நீர் பிரச்னை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் இது கெஜ்ரிவாலால் மட்டுமே முடியும். ஏனெனில் அவர் 2 கோடி டெல்லிவாசிகளை தனது குடும்ப உறுப்பினராக கருதுகிறார்.
பாஜவுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கெஜ்ரிவாலை நீங்கள் சிறையில் அடைத்தாலும், டெல்லி மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பையும், அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையையும் சிறைபிடிக்க முடியாது. சிறையில் அவரை முடக்கினாலும், அவரது பணிகளை உங்களால் முடக்க முடியாது. இவ்வாறு கூறிய அடிசி பின்னர் கெஜ்ரிவாலின் உத்தரவு கடிதத்தை வாசித்து காட்டினார். அதில் கெஜ்ரிவால், ‘டெல்லியின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் பிரச்னை இருப்பதாக அறிகிறேன். அதைப் பற்றி கவலை கொள்கிறேன். நான் சிறையில் இருக்கின்ற காரணத்தால் மக்கள் எந்த பிரச்னையையும் சந்திக்கக் கூடாது. இப்போது கோடைக்காலம் வந்து விட்டது. எனவே அனைத்து பகுதிகளிலும் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். மக்கள் எந்த சங்கடத்தையும் சந்திக்காத வகையில் தலைமை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். மக்கள் அவர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற வேண்டும். தேவைப்பட்டால் ஆளுநரிடமும் உதவி கேளுங்கள். அவர் நிச்சயம் உதவுவார்’ என கூறி உள்ளார். ஊழல் வழக்கில் கைதானதால் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க தகுதியில்லை, அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜ கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் என ஆம் ஆத்மி கூறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்தபடி தனது முதல் உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post பதவி விலகக் கோரும் பாஜவுக்கு பதிலடி அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வராக பணியை தொடர்கிறார் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,ED ,BJP ,Delhi ,Chief Minister ,Enforcement Directorate ,India Alliance ,Chief Minister of ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...