×

இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

ெசன்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் தயாநிதி மாறன் எம்பி போட்டியிடுகிறார். இதே போல தென்சென்னையில் மீண்டும் தமிழச்சி தங்கப்பாண்டியன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி ஆகியோர் களமிறக்கப்படுகின்றனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடன் அவர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். வீடு, வீடாக சென்று மக்களிடம் அவர்கள் வாக்குகளை கேட்டு வருகின்றனர். இதே போல அதிமுக, பாஜ, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் முழுமையாக அறிவிக்கப்பட்டு விட்டனர். அவர்களும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸை பொறுத்தவரை 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டனர். இன்னும் திருநெல்வேலி, மயிலாடுதுறை ஆகிய 2 தொகுதிக்கான வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்படவில்ைல. அவர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட வேட்பாளர் தேர்வு முடிந்து விட்டது.

அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். மொத்தம் 20 நாட்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுபக்கம் திமுக இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதே போல அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதே போல மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்கள் அணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. வேட்புமனு தாக்கல் தேதி நெருங்குவதால் வரும் நாட்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்று விசேஷ நாள் என்பதால் சுயேச்சைகளும் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொறுத்தவரை இன்று முதல் அடுத்தடுத்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். வேட்பாளர்கள் அவரவருக்கு ஏற்ற நேரத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதே போல அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் ெசய்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதே போல பாஜ, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது ஊர்வலங்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் வடசென்னை மக்களவை தொகுதியை பொறுத்தவரை பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகம், மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை செனாய் நகர் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலத்திலும் வேட்புனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

The post இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கிய வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்: தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Sunny ,Dimuka ,Adimuka ,Bahja ,Nai ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...