×

அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்கள் கேட்டு புதுகை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவு

புதுக்கோட்டை: அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்களை வழங்க வேண்டும் என்று புதுகை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அடுத்த மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

நேற்று முன்தினம் (21ம் தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அதே போல் சென்னை இல்லம் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சி.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விபரங்களையும், குற்றப்பத்திரிகை நகல்களையும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சமர்ப்பித்து உள்ள ஆவண நகல்களையும், தங்களுக்கு வழங்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பூரணஜெய ஆனந்த், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அளிக்கும் தகவலின் அடிப்படையில், நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அடுத்த கட்ட தகவலை தெரிவிக்கும் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து விவரங்கள் கேட்டு புதுகை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Enforcement department ,Puducherry court ,AIADMK ,minister ,C. Vijayabaskar ,Pudukottai ,Tamil Nadu Anti-Corruption Bureau ,Enforcement Directorate ,C.Vijayabaskar ,Ilupur, Pudukottai district ,Pudukaya Court ,Ex ,Anti-Corruption Department ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...