×

ஒடிசாவை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்திலும் பா.ஜ கூட்டணி முறிந்தது: தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) உடனான கூட்டணியை பாஜ முறித்துள்ளது. அங்கு தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் மக்களவை தேர்தலுடன் நடத்தப்படுகிறது. அங்கு 32 சட்டப்பேரவை தொகுதிகளும், ஒரு மக்களவை தொகுதியும் உள்ளன. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன், பா.ஜ கூட்டணி வைத்து ஆட்சி நடத்துகிறது. தற்போது அங்கு முதல்வராக பிரேம்சிங் தமாங் உள்ளார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே மோதல் நடந்து வந்த நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக பா.ஜ அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பை சிக்கிம் மாநில பாஜ தலைவர் டி.ஆர்.தாபா வெளியிட்டார். அவர் கூறுகையில்,’எஸ்கேஎம் உடனான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. ஊழலுக்கு எதிரான சுதந்திரமான நடவடிக்கை மற்றும் சிக்கிமின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.

கூட்டணி முறிந்தது மாநில மக்களின் நலன்களுக்கு சேவை செய்ய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மாநிலத்தில் உள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒரே மக்களவைத் தொகுதியிலும் தனித்துப் போட்டியிட பா.ஜ தயாராக உள்ளது’ என்றார். பா.ஜ முடிவு குறித்து முதல்வர் தமாங்கின் அரசியல் செயலாளரும், எஸ்கேஎம் தலைவருமான ஜேக்கப் காலிங் ராய் கூறுகையில், ‘முந்தைய தேர்தலில் பாஜவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லை.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை வைத்தோம். இந்த முறை அது நடக்காது’ என்றார். ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பை நிராகரித்து தனித்து போட்டியிடுவதாக நேற்று முன்தினம் பா.ஜ அறிவித்தது. அதை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்திலும் பா.ஜ தனித்து களம் இறங்குகிறது.

The post ஒடிசாவை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்திலும் பா.ஜ கூட்டணி முறிந்தது: தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha ,BJP ,Sikkim ,Gangtok ,Kranthikari Morcha ,SKM ,Sikkim State Legislative Assembly ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...