×

ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில் பெட்டியை கையால் தள்ளிச் சென்ற அதிகாரிகள்: உபியில் நடந்த கூத்து

அமேதி: உபியின் அமேதியில் ஆய்வின் போது பழுதடைந்த ரயில் பெட்டியை அதிகாரிகள் தள்ளிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. பொதுவாக மாநகர பஸ்கள் தான் சாலையில் திடீரென பிரேக் டவுன் ஆகி, பொதுமக்கள் இறங்கி தள்ளிச் செல்வதை கேள்விப்பட்டுள்ளோம். இப்போதெல்லாம் முறையான பராமரிப்பு செய்யப்படுவதால், பஸ்கள் பிரேக் டவுன் ஆவதே குறைந்து விட்ட நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் பழுதடைந்த ரயில் பெட்டியை தண்டவாளத்தில் ரயில்வே அதிகாரிகள் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் கேலிக்குரியதாகி உள்ளது.

அமேதியின் சுல்தான்பூரில் இருந்து நிஹால்கர் இடையே இன்ஜினுடன் கூடிய ரயில் பெட்டியை ரயில்வே அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்த பெட்டி நிஹால்கர் ரயில் நிலையத்தை அடைவதற்குள் பழுதாகி நடு வழியில் நின்றது. அந்த சமயத்தில் வேறொரு ரயில் எதிர் திசையில் வர இருப்பதால் ரயில்வே கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் வேறு வழியில்லாமல் பழுதடைந்த ரயில் பெட்டியில் ஆய்வு செய்ய வந்திருந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இறங்கி, அந்த பெட்டியை தள்ளு, தள்ளுவென தள்ளி மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு மாற்றினர்.

அந்த சமயத்தில் ரயில்வே கிராசிங் கேட் அருகில் நின்றிருந்த பொதுமக்கள் ரயிலையே தள்ளிக் கொண்டு செல்வதை முதல் முறையாக பார்த்து பிரமித்துப் போயினர். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘உடனடியாக ரயில்வே அமைச்சரையும் அழையுங்கள். அவரையும் தள்ள வையுங்கள். பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சியில் தேர்தல் பத்திரங்களில் இருந்து எரிபொருள் கிடைக்காததால் ரயிலை தள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்’’ என கிண்டலடித்துள்ளார்.

காங். தனது டிவிட்டரில், ‘‘புல்லட் ரயில் என வாக்குறுதி தந்துவிட்டு, இப்போது வெறும் ரயிலையே தள்ள வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். மோடி ஆட்சியில் அனைத்து துறைகளும் அழிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயும் மோசமாக பாதித்துள்ளது’’ என பதிவிடப்பட்டுள்ளது.

The post ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில் பெட்டியை கையால் தள்ளிச் சென்ற அதிகாரிகள்: உபியில் நடந்த கூத்து appeared first on Dinakaran.

Tags : UP ,Amethi ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...