×

அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தன்னை கைது செய்து அமலாக்கத்துறை காவலில் வைத்து இருப்பது சட்டவிரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி உள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வரும் 28ம் தேதி வரை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது கைதுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கெஜ்ரிவாலை கைது செய்து அமலாக்கத்துறை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து இன்றைக்கே விசாரிக்க வேண்டுமென நீதிபதிகளிடம் வலியுறுத்த இருப்பதாக கெஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் குழு நேற்று மாலையில் தெரிவித்தது.

* டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் கடிதம்
இதற்கிடையே, சிறையிலிருந்து டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் தனது செய்தியை அனுப்பி உள்ளார். இது குறித்த கெஜ்ரிவாலின் கடிதத்தை அவரது மனைவி சுனிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் வாசித்தார். அதில், கெஜ்ரிவால் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: எனது அன்பான நாட்டு மக்களே. நான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளேன். நான் சிறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வேன். என் முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளேன்.

என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்துள்ளேன். நான் கைது செய்யப்படுவேன் என்பது தெரியும். எனவே, கைதானது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதால் அவர் அளித்த மாதம் ரூ.1000 நிதி உதவி கிடைக்குமா என பெண்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். உங்கள் சகோதரன், மகனான என்னை நம்புங்கள். எனது விடுதலைக்காக கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் ஆசீர்வாதம் எனக்கு அவசியம்.

எந்த சிறையாலும் என்னை நிரந்தரமாக அடைத்து வைக்க முடியாது. விரைவில் நான் விடுதலையாகி வந்து டெல்லி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். நான் சிறை சென்றதால் எந்த பணிகளும் நலத்திட்டங்களும் நின்றுவிடக் கூடாது. சமூக நலன் மற்றும் மக்கள் நலனுக்காக ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதோடு, எனது கைதுக்காக பாஜ கட்சியினரை வெறுக்க வேண்டாம். அவர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான்.

இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் பல சக்திகள் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். கெஜ்ரிவால் கைதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் 2வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பினால், சிறையிலேயே அவருக்காக முதல்வர் அலுவலகம் அமைக்க நீதிமன்றத்தின் அனுமதியை கேட்போம் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறி உள்ளார்.

* போலீஸ் அதிகாரிக்கு எதிராக மனுதாக்கல்
கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியான போலீஸ் ஏசிபி (காவல்துறை உதவி ஆணையர்) ஏ.கே.சிங் தவறாக நடந்து கொண்டதாகவும், கட்சியினரை நீதிமன்றத்தில் நுழைய விடாமல் தேவையின்றி கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதற்காக அவரை பதவிநீக்கம் அல்லது இடமாற்றம் செய்யக் கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்மந்தப்பட்ட வீடியோ பதிவுகளை பாதுகாத்து, அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

* ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு சீல்
டெல்லியில் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, ஐடிஓவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சி தலைவர்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

* எம்எல்ஏ வீட்டில் ஐடி ரெய்டு
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லி மதியாலா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

* ஜெர்மனி தூதருக்கு இந்தியா கண்டனம்
கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த, ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், ‘‘இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்’’ என கூறியிருந்தது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள ஜெர்மன் துணை தூதர் ஜார்ஜ் என்ஸ்வெய்லருக்கு சம்மன் அனுப்பிய இந்திய வெளியுறவு அமைச்சகம், அவரை நேரில் அழைத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளது.

* கவிதா மருமகனும் சிக்குகிறார்
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது காவல் நேற்றுடன் முடிந்ததைத் தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை ஈடி காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது, கவிதாவின் மருமகன் மேகா ஸ்ரீசரணுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

மதுபான ஊழல் விவகாரத்தில் கிடைத்த லஞ்ச பணத்தை மேகா ஸ்ரீ சரண் பயன்படுத்தி உள்ளார், அதை டிரான்ஸ்பர் செய்ததற்காக தகவல்கள் கிடைத்ததால் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளது. 2 முறை நோட்டீஸ் விடுத்தும் மேகா ஸ்ரீ சரண் ஆஜராகவில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* போரை நிறுத்த சொல்ல என்ன தகுதி இருக்கிறது
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜ முயற்சிக்கிறது. இதனால் எதிர்க்கட்சி தலைவர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் சிறையில் அடைக்கிறது. எனவே நாம் ஒன்றுபட வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் நாட்டை அழித்து விடுவார்கள்.

கெஜ்ரிவால் விடுதலையாக வேண்டும், நாட்டில் மிகப்பெரிய புரட்சியை கொண்டு வர வேண்டும். கெஜ்ரிவால் கைது குறித்து அனைத்து சர்வதேச பத்திரிகைகளும் அவற்றின் முதல் பக்கத்தில் இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. இத்தகைய செயலை செய்த நபர்கள் ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசுகிறார்கள். இதைப் பற்றி பேச, எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்கும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?’’ என்றார்.

The post அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,High Court ,New Delhi ,Enforcement Directorate ,Delhi government ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...