×

டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

முல்லன்பூர்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியான இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச முடிவு செய்தார். கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் ஓராண்டுக்கும் மேலாக ஓய்வெடுத்து வந்த அதிரடி வீரர் ரிஷப் பன்ட், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டனாக நேற்று மீண்டும் களமிறங்கினார்.

சக வீரர்கள், எதிரணி வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவரில் 39 ரன் சேர்த்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தது. மார்ஷ் 20 ரன் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் வெளியேறினார். வார்னர் 29 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாய் ஹோப் 33 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உள்ளே வந்த கேப்டன் ரிஷப் பன்ட் 18 ரன் எடுத்து (13 பந்து, 2 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுக்க… ரிக்கி புயி 3, டிரைஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 21 ரன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். சுமித் குமார் 2 ரன்னில் வெளியேறினார். ஹர்ஷல் வீசிய கடைசி ஓவரில் அபிஷேக் போரெல் அதிரடியாக 4, 6, 4, 4, 6 என பந்தை பறக்கவிட்டு அசத்தினார். கடைசி பந்தில் குல்தீப் யாதவ் (1) ரன் அவுட்டானார்.

டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. போரெல் 32 ரன்னுடன் (10 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2, ரபாடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ர எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ இணைந்து துரத்தலை தொடங்கினர்.

தவான் 22 ரன் (16 பந்து, 4 பவுண்டரி) விளாசி இஷாந்த் வேகத்தில் கிளீன் போல்டாக, பேர்ஸ்டோ 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். பிரப்சிம்ரன் 26, ஜிதேஷ் ஷர்மா 9 ரன்னில் பெவிலியன் திரும்ப, பஞ்சாப் அணி 11.3 ஓவரில் 100 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே தடுமாறியது. இந்த நிலையில், சாம் கரன் – லயம் லிவிங்ஸ்டன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியாக 67 ரன் சேர்த்து ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்பியது.

19வது ஓவரில் சாம் கரன் (63 ரன், 47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஷஷாங்க் சிங் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பஞ்சாப் கிங்ஸ் 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. லிவிங்ஸ்டன் 38 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது தலா 2, இஷாந்த் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். சாம் கரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Delhi ,Mullanpur ,IPL league ,Delhi Capitals ,Punjab Kings ,Maharaja Yadavindra Singh ,International Cricket Stadium ,Mullanpur, Punjab ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி...