×

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது: திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது என தஞ்சை, நாகை வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஊர்குடி என்ற இடத்தில் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை. செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித்தலைவர்களையே வீட்டுசிறையில் அடைத்தார்கள்.

முன்னாள் முதலமைச்சர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போதுகூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜ பாணி, சர்வாதிகாரம். இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பாஜ மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பாஜ ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். ‘நானும் ஒரு விவசாயி’ என்று பச்சைத்துண்டை போட்டுக்கொண்டு, பச்சைத்துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. காவிரி பிரச்னையில் பாஜவும் – அதிமுகவும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தை சேர்ந்த உங்களால் மறந்திருக்க முடியாது. முதுகெலும்பு இல்லாமல் பாஜ அரசுக்கு தலையாட்டி கொண்டிருந்தார் பழனிசாமி.

இந்த இரண்டு பேரின் துரோகத்தையும் உணர்ந்து, இவர்களை டெல்டா மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். சமீபகாலமாகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை அறிவித்திருந்தால் பாராட்டலாம். தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்குத் தமிழ்நாட்டு மக்களும் தங்களின் வாக்கையும் தர மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும். அதனால்தான், திமுக மேல் அளவுக்கு அதிகமான ஆத்திரத்தை கொட்டுகிறார். தி.மு.க.வைத் தரக்குறைவாகப் பேசுகிறார். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கலைஞர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், பிரதமர் மோடி அவர்களே, நாங்கள் தென்றலை தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறோம். கருப்பு சிவப்பு கொடியை கையிலேந்தி வரும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்பை இன்னும் தீவிரமாக வேலை செய்ய வைப்பதே இந்த எதிர்த்தாக்குதல்தான்.

எதிர்த்தாக்குதல் வந்தால்தான் திமுக தொண்டர்கள், உற்சாகத்துடன், வெறியுடன் களப்பணி ஆற்றுவார்கள். பிரதமர் மோடி அவர்களே.. நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வாருங்கள். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மீதும், பாஜ மீதும் இருக்கும் கோபத் தீ அடங்காமல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். மாநிலத்தை கெடுத்த அதிமுக, மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பாஜ, இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்த மாதிரியே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும். தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்கு வெற்றி வேட்பாளர் முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கு வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜுக்குக் கதிர் அரிவாள் சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற வையுங்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக அமைப்பு முறை இருக்காது: திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bahja ,Chief Minister ,Thiruvaroor General Assembly ,K. Stalin ,Trichy ,Thanji ,Nagai ,Mu Thanchi ,Dimuka Election Press Conference ,Ourkudi ,Koradacheri, Thiruvarur district ,Baja ,Thiruvarur General Assembly ,MLA K. Stalin ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...